‘விக்ரம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ‘லியோ’ திரைப்படம் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்திரைப்படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. காஷ்மீரில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் ‘லியோ’ படக்குழு ஒரு காணொளியை வெளியிட்டது. படப்பிடிப்பில் முக்கிய பங்காற்றிய கடைநிலை பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்த காணொளி அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அனிருத் இசையில் தயாராகியுள்ள முதல் பாடலின் படப்பிடிப்பு ஜூன் 6ஆம் தேதி சென்னையில் நடைப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக விசாரித்த போது சுவாரசியமான பல தகவல்கள் கிடைத்தன. ‘லியோ’ திரைப்படத்தின் இன்ட்ரோ பாடலின் படப்பிடிப்பு சென்னை ஆதித்யா ராம் ஃபிலிம் சிட்டியில் நடந்திருக்கிறது. சுமார் 2000 டான்ஸர்ஸை வைத்து இந்தப் பாடலை பிரம்மாண்டமான முறையில் எடுத்திருக்கிறார்கள். ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலைத் தொடர்ந்து நடன இயக்குநர் தினேஷ் இப்பாடலுக்கு கோரியோகிராஃப் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத்தும், ‘ஜோர்தாலே’ பாடல் மூலம் பிரபலமடைந்த அசல் கோளாறும் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கின்றனர். இப்பாடல் ‘வாத்தி கம்மிங்’ பாடலை விட அதிரடியான குத்து பாடலாக இருக்கிறதாம். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘லியோ’ திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.