திருப்பதி: திருப்பதி எழுமலையான் கோவிலில் நடிகை கீர்த்தி சனோனுக்கு இயக்குநர் முத்தம் கொடுத்ததால், அவரை பக்தர்கள் வசைபாடி வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சனோன் பிரபாஸூடன் இணைந்து ஆதிபுருஷ் படத்தில் சீதாவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 16ந் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் சயிஃப் அலிகான், அமிதாப் பச்சன், கஜோல், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஒம் ரவுத் இயக்கி உள்ளார்.
ஆதிபுருஷ் : பல கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படும் போது ஒரு இருக்கை மட்டும் ஆஞ்சநேயருக்காக காலியாக விட வேண்டும் என்ற நிபந்தனையை ஆதிபுருஷ் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரம்மாண்ட விழா : இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பட விழா நேற்று திருப்பதியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குநர் ஓம் ரவுத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலையே திருப்பதி வந்த பிரபாஸ்,நேராக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கீர்த்தி சனோன் : இதையடுத்து, பிரம்மாண்ட கட் அவுட் ஆரவாரத்துடன் ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில், இன்று காலை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ரவுத் ஆகியோர் விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அப்போது, கோவில் பிரகாரத்தில் கீர்த்தி சனோன் நடந்து வந்து கொண்டிருந்த போது, இயக்குநர் ஓம் ரவுத் கீர்த்தி சனோனுக்கு முத்தம் கொடுத்தார்.
சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் : இயக்குநர் ஓம் ரவுத் திடீரென இப்படி நடந்து கொண்டது அங்கிருந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சாமி கும்பிட வந்த இடத்தில் இப்படியா என்றும், கோவிலில் இப்படியா நடந்து கொள்வீர்கள் என்றும் நெட்டிசன்கள் இயக்குநரை திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த முத்த விவகாரத்தால் ஆதிபுருஷ் இயக்குநர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.’