பாட்டில் விற்றால் பிடிப்பியா..? செருப்பை எடுத்து போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்…! அமைச்சரின் பெயரை சொல்லி அச்சுறுத்தல்

ஆலங்குடி அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பாரில் மதுபானம் விற்றவரை போலீசார் பிடித்துச்சென்ற போது மறித்த திமுக பிரமுகர் ஒருவர் போலீசாரை செருப்பால் அடிக்க பாய்ந்ததோடு அமைச்சரின் பெயரை சொல்லி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டவிரோதமாக செயல்படும் பாரில் கள்ளத்தனமாக மதுவிற்றவரை போலீசாரின் பிடியில் இருந்து விடுவிக்க முயலும் திமுக பிரமுகர் மதியழகன் இவர் தான்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வணக்கன்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் சட்ட விரோத பாரில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் டி.எஸ்.பி தீபக் ரஜினியின் தனிப்படை போலீசார் இருவர் ஆய்வு செய்தனர். அங்கு கள்ளத்தனமாக மதுவிற்ற பரிமளம் என்பவரை பிடித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு வந்த திமுக நிர்வாகியான மதியழகன் என்பவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் போலீசாரை வழிமறித்து தனக்கு அமைச்சர் வரை செல்வாக்கு உண்டு எனக் கூறி மிரட்டினார்

போலீசார் கையும் களவுமாக பிடித்து வைத்திருந்த மதுபாட்டில் வியாபாரி பரிமளத்தை விடுவிக்க முயன்றார். பரிமளம் தப்பிச்சென்று விடாதபடி அவரது சட்டையை போலீசார் கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

தனிப்படை போலீசாரை ஆபாசமாக பேசி செருப்பை எடுத்து அடிக்கப்பாய்ந்தார் மதியழகன் , இதனை போலீஸ்காரர் ஒருவர் செல்போனில் படம் பிடித்ததால் , தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்த மதியழகன் மது விற்றவரை தாக்குவது போல நடித்தார்.

உள்ளூர் போலீசார் மதியழனுக்கு விலை போன நிலையில் தன்பிப்படை போலீசாரும் திறம்பட செயல்பட்டு சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பரிமளத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

தனிப்படை காவலர்களை மிரட்டிய மதியழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் வடகாடு போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.