சென்னை:
“இதுலாம் ஒரு மூஞ்சி.. இந்த மூஞ்சியை பார்த்தால் எவனாவது ஓட்டு போடுவானா” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அக்கட்சி நிர்வாகி எஸ்.வி. சேகர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலையை பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர் பொதுவெளியில் பயங்கரமாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “அண்ணாமலை ஒரு பிராமண விரோதி. கட்சியில் உள்ள பிராமணர்களுக்கு எதிராக அவர் செயல்பட்டு வருகிறார்” எனக் கருத்து தெரிவித்திருந்தது பெரும் புயலை கிளப்பியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலையும் காரசாரமாக பேசியிருந்தார். “இந்த அண்ணாமலை எவனுக்கும் அடங்கி போக மாட்டான். பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. என்னை பற்றி புகார் கொடுக்கணும்னா தாராளமா டெல்லிக்கு போங்க. நானே டிக்கெட் வாங்கி தாரேன். எங்க அப்பா அவரு. எங்க தாத்தா இவரு. நான் 40 வருஷமா அப்படி இருந்தேன் என்ற பேச்செல்லாம் என்னிடம் செல்லுபடியாகாது. இதெல்லாம் உங்க வீட்டுல வெச்சுக்கணும். இதை எஸ்.வி. சேகருக்கு மட்டுமல்ல. அவர் கூட இருக்குற எல்லோருக்கும் சொல்றேன். எனக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி” என அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், எஸ்.வி. சேகர் தற்போது அண்ணாமலையை விமர்சித்து ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் ஒன்று முக வசீகரம் இருக்க வேண்டும். இல்லையென்றால் பேச்சு திறமை இருக்க வேண்டும். நான் வாஜ்பாய் காலத்தில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தவன். அப்போது நான், வாஜ்பாய் என்ற பெயரிலேயே ‘பாய்’ இருக்கிறது. அவர் எப்படி பாய்களுக்கு (முஸ்லிம்கள்) எதிராக இருப்பார் என பேசினேன். இது மக்களை கவர்ந்தது. அண்ணாமலைக்கு இப்படி பேச தெரியுமா? அண்ணாமலையை நான் விமர்சிச்சா, ஏதோ கடவுளையே திட்டுன மாதிரி பேசுறதுலாம் முட்டாள்தனம்.
இப்போ என்ன.. அண்ணாமலையை நான் விமர்சிச்சதால என்னை கட்சியை விட்டு நீக்குவாங்களா.. நீக்கிட்டு போங்க. எனக்கு நஷ்டம் கிடையாது. அந்தாளு சொல்றான். எனக்கு டிக்கெட் வாங்கி தாரானாம். அதுவும் டெல்லி போக மட்டும்தான் வாங்கி தருவாராம். திரும்ப வர வாங்கி தர மாட்டாராம். இந்த மாதிரி புத்தி உள்ளவரை வச்சிட்டு என்ன பண்ண முடியும்? என்னுடைய 7 பக்க profile-ஐ நான் தரேன். அதுல அரை பக்கத்துக்கு அண்ணாமலையால் ஈடு செய்ய முடியுமா? நான் 53 தடவை ரத்தம் கொடுத்திருக்கேன். அண்ணாமலை எத்தனை முறை ரத்தம் கொடுத்துருக்காரு?
கேட்டால் சிங்கம் சிங்கம்னு சொல்ல வேண்டியது. கர்நாடகாவில் அசிஸ்டென்ட் கமிஷனரா ஒரே ரேங்கில் இருந்திருக்கிறார். இதுல என்ன அவரு சிங்கம்னு எனக்கு தெரியல. ரஜினிகாந்த் நடித்த படம் அண்ணாமலை. அந்த படத்தின் பெயரை வெச்சிருக்குறதால தமிழ்நாட்டில் இவர் பெயர் பிரபலமாகிவிட்டது. இல்லைனா யாருக்கு தெரியும் இந்த ஆள? வன்னியர்ல கல்யாண ராமன் இருக்காரு. தேவேந்திர குல வேளாளர்ல நல்லக்கண்ணுனு ஒருத்தர் இருக்காரு. அவங்கள எல்லாம் பாஜக தலைவராக ஆக்கலாமே.
இதையெல்லாம் டெல்லிக்கு யாரு சொல்றது.. நாமதான் சொல்லணும். பாஜகவில் 30 மாவட்ட தலைவர்கள் புது லேட்டஸ்ட் இன்னோவா கார் வாங்கிருக்காங்களாம். அவங்களுக்கு யாரு இவ்வளவு சம்பளம் கொடுப்பது? அண்ணாமலை அவங்களுக்கு வேலை வாங்கி கொடுத்தாரா? நான் என் காரை மாத்தி 5 வருஷம் ஆச்சு. இதெல்லாம்தான் என் மனசுக்கு சங்கடமா இருக்கு.
ஒரு எம்எல்ஏ சீட்டு கூட ஜெயிக்க முடியாதவர்தான் அண்ணாமலை. இத்தனை பணபலம், ஆள்பலம் கொடுத்தும் அவரால் ஜெயிக்க முடியலைனா என்ன காரணம்.. அதுதான் முகராசி. இந்த மூஞ்சியை பார்த்ததும் எதுக்குடா இதுக்குலாம் ஓட்டு போடணும்னு மக்களுக்கு தோணும். அண்ணாமலையோட மூஞ்சி நம்பிக்கை கொடுக்குற மூஞ்சியா.. இல்லையே. இவ்வாறு எஸ்.வி. சேகர் பேசியுள்ளார்.