மேட்டூர்: மேட்டூர் அணை நீர்த் தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி திமுக கவுன்சிலர் மகன் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் குள்ளவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. மேட்டூர் நகராட்சி 2-வது வார்டு திமுக கவுன்சிலர். இவரது மகன் சதீஷ்குமார் (24). இன்ஜீனியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் நேர்காணலுக்கு நாளை (8ம் தேதி)செல்ல இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் கொளத்தூர் அடுத்த அய்யம்புதூர் பகுதியைச் சேர்ந்த நண்பர் செல்வகுமார் (19) என்பவரை பார்க்கச் சென்றுள்ளார்.
பின்னர், விராலிக்காடு செங்கல் சூளை அருகே மேட்டூர் அணை நீர்தேக்கத்தில் இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். பின்னர், நீச்சல் அடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்ற போது, இருவரும் நீரில் திடீரென மூழ்கியுள்ளனர். அப்போது, இருவரும் கூச்சலிட்டத்தைப் பார்த்த 100 நாள் திட்ட ஊழியர்கள் சேலை தூக்கி போட்டு மீட்டுள்ளனர். இதில் செல்வகுமாரை மட்டும் மீட்ட நிலையில், சதீஷ்குமார் நீரில் மூழ்கினார். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் கொளத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேட்டூர் தீயணைப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகே சதீஷ்குமாரை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.