புவனேஸ்வர்: ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி கடந்த வெள்ளிக்கிழமை கோர விபத்து நடந்ததில் 280க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கிய அதே ஸ்பாட்டில் இன்று மீண்டும் சரக்கு ரயில் மோதி 6 தொழிலாளர்கள் பலியாகினர். நின்ற சரக்கு ரயில் திடீரென நகர்ந்த நிலையில் மழைக்கு ஒதுங்கிய தொழிலாளர்கள் நசுங்கி பலியாகினர்.
ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் ரயில் வந்து கொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலேஹார் என்ற இடத்தில் சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து நடந்தது. மேலும் தடம்புரண்ட பெட்டியின் மீது இன்னொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
ஒரே நாளில் அடுத்தடுத்த சில நிமிடங்களில் இந்த கோர விபத்து நடந்தது. இது ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த விபத்தில் தற்போது 280க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சோகவடு மறைவதற்குள் தான் தற்போது மீண்டும் ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாகி உள்ளனர்.இந்த விபத்து ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் ரோடு ரயில் நிலையம் அருகே நடந்துள்ளது. அதாவது இன்று மதியம் அந்த ரயில் நிலையம் அருகே சில தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
ரயில்வே பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வரும் ஒப்பந்தாரர் சார்பில் தொழிலாளர்கள் அங்கு பணியாற்றி வந்தனர். அப்போது கனமழை பெய்தது. இதையடுத்து தொழிலாளர்கள் ஒதுங்கி நிற்க முடிவு செய்தனர். அப்போது ரயில் தண்டவாளம் ஒன்றில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. இந்த ரயில் நீண்டகாலமாக ஓடாத நிலையில் என்ஜின் எதுவும் இன்றி தண்டவாளத்தில் நின்றது.
இதையடுத்து தொழிலாளர்கள் அந்த சரக்கு ரயிலின் பெட்டிக்கு அடியில் சென்று மழைக்காக ஒதுங்கினர். அப்போது தான் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று ரயில் பெட்டிகள் நகர தொடங்கின. கண்இமைக்கும் நேரத்தில் ரயில் பெட்டிகள் அடியில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கூச்சலிட்டனர். அருகே இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு ரயில் மோதி 6 பேர் இறந்திருந்தது தெரியவந்தது. அதோடு 2 பேர் படுகாயமடைந்திருந்து உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான 6 பேரின் உடல்களும் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீண்டகாலமாக என்ஜின் எதுவும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்ட இந்த சரக்கு ரயில் பெட்டிகள் திடீரென்று இன்று நகர்ந்தது எப்படி? என்பது தெரியவில்லை. இந்த விபத்தை தொடர்ந்து டிஆர்எம் குர்தா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். முன்னதாக இந்த இடத்தில் தான் கடந்த 2013ல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி இருந்தது. தற்பாது இன்று மீண்டும் சரக்கு ரயிலின் பெட்டிகள் சரிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலியாகி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.