கொடுமை.. 16000 இதய ஆபரேஷன்களை செய்த டாக்டர் மாரடைப்பில் உயிரிழப்பு.. 41 வயதில்..

காந்திநகர்:
16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த இளம் மருத்துவர் கவுரவ் காந்தி மாரடைப்பால் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). குஜராத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த இதய மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இதுவரை 16000 இதய அறுவை சிகிச்சைகளை செய்து மரணத்தின் விளம்பில் இருந்த பலரை மீட்டவர் கவுரவ் காந்தி.

அதுமட்டுமின்றி, மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்; என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு பதிவுகளையும் தினமும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு லட்சக்கணக்கானோரின் அன்பையும் பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்ற கவுரவ் காந்தி, அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். பின்னர், இரவும் எப்போதும் போல சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றிருக்கிறார். பொதுவாக, காலை 6 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்ட கவுரவ் காந்தி, அன்றைக்கு 8 மணி ஆகியும் எழாததால் அவரது குடும்பத்தினர் அவரை எழுப்பச் சென்றனர்.

ஆனால் அவர் எந்த அசைவும் இன்றி கிடந்துள்ளார். இதனால் பயந்துபோன குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சரியான உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்து வந்த இதய மருத்துவரே, இத்தனை சிறிய வயதில் மாரடைப்பில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.