சென்னை: “தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் அவர் செய்து கொண்டிருக்கும் சித்து விளையாட்டுகளை எல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற அந்த உணர்ச்சியோடு இன்று நாங்கள் கிளம்பி இருக்கிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி தொடங்கியது. இதற்காக அரசு சார்பிலும் திமுக தரப்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக துக்கம் அனுசரிக்கப்பட்டதால், ஒரு சில நிகழ்வுகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், புதன்கிழமை மாலை நடைபெற்றது. பின்னி மில் வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “கருணாநிதி நூற்றாண்டு விழாவினை இந்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இரயில் விபத்து காரணமாக ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்க நேர்ந்தது. அன்று நடைபெறுவதாக இருந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. கருணாநிதியை கொண்டாட வேண்டியது, அவரது புகழைப் பரப்ப வேண்டியது நம்முடைய கடமை. அதனால்தான் நாம் இன்று தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி வரை கொண்டாட இருக்கிறோம்.
95 வயது வரை வாழ்ந்த கருணாநிதி, இன்னும் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இதே மேடையில் விழா நாயகராக நடுநாயகமாக அவரே அமர்ந்திருப்பார். முதுமையின் காரணமாக அவர் உடல் நலிவுற்றார். நம்மை விட்டுப் பிரிந்தார். பிரிந்தார் என்று சொல்வதை விட, நான் அடிக்கடி சொல்லி வருவதைப் போல எங்கும் நிறைந்திருந்து, நம்மை கண்காணித்துக் கொண்டு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் – ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற எல்லைகளைக் கடந்து உலகத் தலைவராக, ஒரு கருத்தியல் தலைவராக கருணாநிதி இருந்தார்கள். திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தவரும் அவர்தான். திராவிடம் என்ற சொல்லைப்பார்த்து இன்றைக்கு சிலர் பயப்படுகிறார்கள். கண்ணைமூடிக் கொண்டு விதண்டாவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிடத்தின் உள்ளடக்கம். எல்லாருக்கும் எல்லாம் வாய்த்துவிட கூடாது என்ற நினைப்பவர்களே திராவிட மாடலை எதிர்க்கிறார்கள்.
மாநிலத்தின் வளம் என்பது மாநில மக்களின் சிந்தனை வளர்ச்சியால் தெரிய வேண்டும் என்பதே திராவிட மாடல் வளர்ச்சி. இதுதான் தமிழ்நாடு என்கிற மாநிலத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக வளர்க்கபோகிறது. நாளையே இது நடந்துவிட போகிறது என்று சொல்லக்கூடிய கற்பனைவாதி அல்ல நான். ஆனால், திராவிட மாடலே அதனை செய்துகாட்டும் என்று நம்பிக்கை கொண்டவன் நான். இந்த தன்னம்பிக்கையும் தைரியத்தையும் என்னுள் விதைத்தவர் கருணாநிதிதான். நான் அவரது கொள்கை வாரிசு.
எனவே, பேரறிஞர் அண்ணா போட்டுத் தந்த பாதையில் – கருணாநிதி உருவாக்கிக் கொடுத்த திட்டங்களின் மூலமாக கடந்த ஐம்பதாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த பயனை நாட்டு மக்களுக்குச் சொல்லக் கூடிய வாய்ப்பாகத் தான் இந்த நூற்றாண்டு விழாவை நான் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் கருணாநிதி கால் படாத இடமில்லை. சந்திக்காத மனிதர்களில்லை. தொடங்காத திட்டமில்லை. இப்படி ஊர் தோறும் – நகர் தோறும் – கிராமம் தோறும் விழா எடுக்கத் தொடங்கினால் நூற்றாண்டு விழாவையே பத்து ஆண்டுகளுக்கு கொண்டாட வேண்டி வரும். இதனொரு பகுதியாக, சென்னை கிண்டியில் கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு , மதுரையில் கருணாநிதி நினைவக நூலகம் திறப்பு , ஆகஸ்ட் 7ல் சென்னை கடற்கரையில் கருணாநிதி நினைவக திறப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளன.
தமிழ்நாட்டின் திரும்பும் திசை எல்லாம் நிறுவனங்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய கருணாநிதி பெயரிலான சின்னங்கள் மாதம்தோறும் திறக்கப்பட இருக்கின்றன.
இதற்கிடையேதான் ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று தீர்மானிப்பதை விட யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அமைய வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் தேர்தல் சடங்கு அல்ல, 2024 நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவில் ஜனநாயக அமைப்பு முறையையும் இந்தியாவில் கூட்டாட்சிக் கருத்தியலையும் காப்பாற்றுவதற்காக, இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க.வுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் – மாறுபாடுகளை மறந்து இந்தியாவைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும்.
அறிவாலயத்தில் இருந்து இந்தக் கூட்டத்திற்கு நான் புறப்பட்டு காரில் வந்து கொண்டிருந்தபோது, பிகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வருகிற 23-ம் தேதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் பிகார் மாநிலத்திற்கு வரவேண்டும். அகில இந்திய அளவில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர அந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்றார்.
தமிழ்நாட்டில் எவ்வாறு ஒரு ஜனநாயக ஆட்சி உருவாகுவதற்கு ஒரு கூட்டணி அமைத்தோமோ, அதுபோல் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு, ஒரு கூட்டணி அமைந்திட வேண்டும் என்று இன்றல்ல, தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். என்னை வந்து சந்திக்கும் அகில இந்தியத் தலைவர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன். மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்களிடமும் வலியுறுத்தி வருகிறேன்.
மதவாத – பாசிசவாத – எதேச்சாதிகார பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் அகில இந்தியா முழுமைக்கும் ஒன்றுசேர வேண்டுமே தவிர, தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
பிரிவினைகளால் பா.ஜ.க. வெல்லப் பார்க்கும். சாதியால், மதத்தால் பிரிவினையை விதைக்கும் அந்தக் கட்சி, அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளின் மூலமாக வெல்லப் பார்க்கும். அதற்கு அகில இந்தியத் தலைவர்கள் – மாநிலக் கட்சித் தலைவர்கள் மாநிலங்களின் முதலமைச்சர்கள் யாரும் இரையாகிவிடக் கூடாது. எத்தகைய பொய்யையும் சொல்ல பா.ஜ.க.வினர் தயங்க மாட்டார்கள். அவதூறுகளை அள்ளி வீசவும் அதனைப் பரப்பவும் பா.ஜ.க.விடம் ஏவலுக்கு கீழ்ப்படியவும் சிந்தனையற்ற – வெறுப்புணர்ச்சியால் மழுங்கடிப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது.
அதற்குத் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் அவர் செய்து கொண்டிருக்கும் சித்து விளையாட்டுகளை எல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற அந்த உணர்ச்சியோடு இன்று நாங்கள் கிளம்பி இருக்கிறோம். எதை வேண்டுமானாலும் பேசட்டும், எங்களுக்குக் கவலை இல்லை. மக்கள் நம்மோடு இருக்கிறார்கள்.
ஒற்றுமையின் மீது, சகோதரத்துவத்தின் மீது, மதச்சார்பின்மையின் மீது, உண்மையான வளர்ச்சியின் மீது, இந்த நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ள – மக்கள், நம்மோடு இருக்கிறார்கள். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, நமது உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம்.
“நீ, நான் என்றால் உதடு ஒட்டாது; நாம் என்றால்தான் உதடுகள் கூட ஒட்டும்” என்று கருணாநிதி அடிக்கடி சொல்வார். அவரது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களோடு இந்திய ஜனநாயகத் திருவிழாவையும் நாம் கொண்டாடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் நமக்காக அல்ல, நாட்டிற்காக, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் தேர்தல்” என்று தெரிவித்தார்.