தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த இருவர் மர்மான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், நகை செய்கிற பட்டறை உரிமையாளர்களிடம் சயனைடு கொடுத்தது யார் எனக் கேட்டு விசாரணை என்ற பெயரில் போலீஸார் அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும், இதனால் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி நகை பட்டறை உரிமையாளர்கள் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர், கீழஅலங்கம் பகுதியில் மீன் மார்க்கெட்டுக்கு எதிரே அரசு டாஸ்மாக் கடை இருக்கிறது. அதன் அருகிலேயே அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் செயல்பட்டு வந்தது. கடந்த மே மாதம் 21-ம் தேதி காலை சுமார் 11 மணியளவில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு அந்த பாரில் மது வாங்கி குடித்த விவேக், குப்புசாமி ஆகிய இருவர் மர்மான முறையில் உயிரிழந்தனர்.
சயனைடு கலந்த மதுவை குடித்ததே அவர்களது இறப்புக்குக் காரணம் என உடற்கூறாய்வில் தெரியவந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் அப்போது கூட்டாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து ஐந்து டி.எஸ்.பி-க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இறந்த விவேக்கின் மனைவி, அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், விவேக்கின் அண்ணன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டும் போலீஸாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து விவேக்கின் மனைவி ஜெனிஃபர் ஆரோக்கிய ரேகா அவருடைய அம்மா ராணி, தம்பி அருண்ராஜ் உள்ளிட்டோரை விசாரணை என்ற பெயரில் அடிக்கடி போலீஸார் அழைத்ததுடன், மதுவில் சயனைடு கலந்ததாக ஒப்புக்கொள்ளுங்கள் என மிரட்டியதாக அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பினர்.
இந்த நிலையில், தஞ்சாவூரில் அய்யங்கடைத் தெருவில் நகை செய்கிற பட்டறை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் சயனைடு கொடுத்தது யார் எனக் கேட்டு போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். அதில் சிலர்மீது வழக்கு பதிவுசெய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தொழில் பாதிக்கப்படைந்து மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வணிகர் சங்கப் பேரவையின் நகரத் தலைவர் வாசு, நகை வியாபாரிகள் சங்கச் செயலாளர் சேகர், நகை தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் தலைமையில் நகைப் பட்டறை கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து நகைப் பட்டறை உரிமையாளர்கள் தரப்பில், “உயிரிழந்தவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்ததாகக் கூறி போலீஸார் கடந்த 15 நாள்களாக எங்களிடம் விசாரணைக்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு யார் சயனைடு கொடுத்தது என தொடக்கத்தில் கேட்டனர். நாங்களும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம்.
பின்னர் அடிக்கடி நகை பட்டறைக்கு வந்து ஆய்வுசெய்தனர். சிலரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்போது அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யவிருப்பதாகக் கூறுகின்றனர். இதனால் நகை செய்வது முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் நகை செய்வதற்கான சயனைடு கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் நகைத் தயாரிப்பு குறித்து போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால், நகைத் தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தினோம்” என்றனர்.