மும்பை, இன்ஜின் கோளாறு காரணமாக, ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏர் – இந்தியா விமானத்திற்கு மாற்றாக, அந்நிறுவனத்தின் மற்றொரு விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
தலைநகர் புதுடில்லியில் இருந்து, கடந்த 6ம் தேதி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் – இந்தியா நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்த போது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரஷ்யாவின் மகடான் நகருக்கு ஏர் – இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது.
இந்த விமானத்தில், 216 பயணியர், 16 விமான ஊழியர்கள் என, மொத்தம் 232 பேர் இருந்தனர்.
மகடானில் தங்க வைக்கப்பட்ட பயணியருக்கு, உணவு, படுக்கை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
இதனால், குழந்தைகள், முதியோர் கடும் அவதிப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மகடானில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணியர் மற்றும் விமான ஊழியர்களை, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு, மீண்டும் அழைத்துச் செல்ல, மும்பையில் இருந்து, ஏர் – இந்தியாவின் மாற்று விமானம் நேற்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது.
மேலும், பயணியருக்கான உணவையும், தேவையான மற்ற பொருட்களையும் அந்த விமானம் ஏற்றிச் சென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement