சென்னை:
“நாம் கவனமாக இருக்கவில்லை என்றால் சில பல செயல்களை செய்து பாஜக ஜெயித்துவிடும். பாஜகவின் அந்த சூழ்ச்சிகளுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சி சென்னை புளியந்தோப்பில் இன்று இரவு நடைபெற்றது. இதில் மதசார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
நமது தலைவர் கருணாநிதி இன்னும் 5 ஆண்டுகள் இருந்திருந்தால் இந்த விழாவில் நாயகராக வீற்றிருப்பார். ஆனால் உடல்நலக்குறைவால் நம்மை விட்டு அவர் பிரிந்துவிட்டார். இல்லை.. இல்லை. .எங்கும் நம்முடன் நிறைந்து நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் என்றைக்கும் நம்மை இயக்கும் உணர்வுகள். அப்படித்தான் நான் பார்க்கிறேன். அந்த உணர்வுகள்தான் அவர்களின் மறைவுக்கு பிறகும் நமக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன.
எந்த திட்டங்களை நான் கொண்டு வந்தாலும் அதை தலைவர் கருணாநிதி கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில்தான் செய்கிறேன். அவர் என்றைக்கும் திமுக உடன்பிறப்புகளுக்கு மத்தியில்தான் இருக்க விரும்புவார். அதனால் இப்போதும் அவர் தொண்டர்களுடன் அமர்ந்திருப்பார் என்றே நான் நம்புகிறேன். திமுக தோன்றிய வடசென்னை பகுதியில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது சிறப்பு வாய்ந்த ஒன்று.
நான் சீமான் வீட்டு பிள்ளை அல்ல. சாமானியர் வீட்டு பிள்ளை என்று கூறியவர் கருணாநிதி. அவரது ஆட்சியும் எப்போதுமே சாமானிய மக்களுக்கான ஆட்சியாகவே இருந்தது. அண்ணாவின் ஆட்சியாக இருந்தாலும் சரி, தலைவர் கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி. அது தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு சிரிக்கும் ஆட்சியாகவே இருந்தது. இப்போதும் அந்த ஆட்சிதான் தொடர்கிறது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது வெறும் தேர்தல் மட்டுமல்ல. அது ஒரு போர். ஜனநாயக போர். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல அது. இந்தியாவில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான தேர்தலாகவே நாம் அதை பார்க்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நமது ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் என்பதை மக்கள் உணர வேண்டும். நாடு முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் இந்த தேர்தலில் ஒன்றிணைய வேண்டும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலே தமிழகத்தில் எப்படி ஒரு வலிமையான கூட்டணியை அமைத்தோமோ, அதேபோல, மதவாத, யதேச்சரிகார, பாசி பாஜக ஆட்சியை தூக்கியெறிய நாடு தழுவிய அளவியில் ஜனநாயக சக்திகள் கூட்டணி அமைக்க வேண்டும்.
இதில் மிக முக்கியமான விஷயம், சின்ன சின்ன பிரச்சினைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் நாம் இடம் தந்துவிடக் கூடாது. ஏனென்றால் இதைதான் பாஜக எதிர்பார்க்கும். அரசியல் கட்சிகள் இடையேயான சிறு முரண்பாடுகளை பயன்படுத்தி பாஜக வெற்றி பெற வழிதேடும். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் இரையாகிவிடக் கூடாது. இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.