சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரபிக்கடலில் நிலவிய ‘பிப்பர்ஜாய்’ புயல் நேற்று தீவிர புயலாக வலுப்பெற்று, கோவாவில் இருந்து மேற்கு, தென்மேற்கே 880 கி.மீ.தொலைவிலும், மும்பையில் இருந்து தென்மேற்கே 990கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்துமிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்து வரும் நாட்களில் முதலில் வடக்கு திசையிலும், பின்னர் வடக்கு, வடமேற்கு திசையிலும் இது நகரக்கூடும்.
தமிழக பகுதியின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜூன் 8, 9-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும், 10, 11-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 84 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
அரபிக்கடலில் நிலவும் தீவிரபுயல் காரணமாக 8, 9-ம் தேதிகளில் கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசும். மத்திய அரபிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
வங்கக்கடலில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 10-ம் தேதி வரை அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.