மாஸ்கோ: டெல்லியிலிருந்து அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் 36 மணி நேரத்திற்கு பின்னர் மாற்று விமானத்தில் பயணிகள் மீண்டும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்கெனவே ஏழரை சனி. இப்படி இருக்கையில் அமெரிக்க பயணிகள் நிரம்பிய விமானம் ஒன்று தங்கள் நாட்டில் டென்ட் அடித்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை ரஷ்யாவால் நீண்ட நேரத்திற்கு நிச்சயம் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே இந்த விமானம் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டது.
வழக்கம்போல டெல்லியிலிருந்து AI-173 எனும் ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டிருக்கிறது. மொத்த பயண நேரம் 15 மணி நேரமாகும். இந்நிலையில் ரஷ்யா மீது விமானம் பறந்துக்கொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் என்ஜினில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதை சரி செய்ய விமானிகள் நீண்ட நேரம் முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. எனவே உடனடியாக அவசர தரையிறக்கத்திற்கு ரஷ்யாவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
பின்னர் ஒரு வழியாக ரஷ்யாவின் மகாடன் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானத்தின் நிலவரம் தொடர்பாக ஏர் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் என்ஜினை சரி செய்ய முடியவில்லை. எனவே மாற்று விமானத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதுரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ரஷ்யாவில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அமெரிக்கர்களுக்கு பிரச்னைதான்.
ஏற்னெவே உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுத்து தங்களுடன் அந்நாட்டை சண்டை போட வைத்துக்கொண்டிருப்பது அமெரிக்காதான் என்று ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில்தான் சான் பிரான்சிஸ்கோ விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் கணிசமான அளவில் அமெரிக்கர்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனவே இந்த பகையை வைத்து அமெரிக்கர்கள் பழிவாங்கப்பட்டுவிடுவார்களோ என அச்சம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், “அமெரிக்காவுக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டதை அறிந்தோம். அது குறித்து கூர்ந்து நோக்கி வருகிறோம். இந்த விமானத்தில் அமெரிக்கர்கள் இருப்பார்கள். ஆனால் அதன் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. பயணிகளின் சிரமத்தை போக்க ஏர் இந்தியா மற்றொரு விமானத்தை ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளது. சூழலை கவனமாக கண்காணித்து வருகிறோம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஏர் இந்தியா அனுப்பிய மாற்று விமானம் AI173D, 36 மணி நேரத்திற்கு பின்னர், 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு ரஷ்யாவிலிருந்து பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா கூறியுள்ளது. இதனையடுத்து பதட்டம் தணிந்திருக்கிறது.