சென்னை: முன்னணி இயக்குநராகவும் ஒளிப்பதிவாளாராகவும் வலம் வந்தவர் பாலு மகேந்திரா.
கோகிலா, அழியாத கோலங்கள், மூடு பனி, மூன்றாம் பிறை உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
திரை மொழியில் பல புதுமைகளை கண்ட இயக்குநர் பாலு மகேந்திரா, நடிகை மெளனிகாவை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இயக்குநர் பாலு மகேந்திராவை திருமணம் செய்துகொண்டது குறித்து நடிகை மெளனிகா மனம் திறந்துள்ளார்.
பாலு மகேந்திராவுக்கு சத்தியம் செய்ய மறுத்த மெளனிகா:1977ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோகிலா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலு மகேந்திரா. முதல் படத்திலேயே சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த பாலு மகேந்திரா, அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார். மூடு பனி, மூன்றாம் பிறை, ரெட்டை வால் குருவி, வீடு போன்ற படங்கள் பாலுமகேந்திராவின் கிளாஸிக் எனலாம்.
அதேபோல், சிறந்த ஒளிப்பதிவாளராகவும் பாலு மகேந்திரா வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தலைமுறைகள் படத்தை இயக்கிய பாலு மகேந்திரா, 2014ம் ஆண்டில் காலமானார். இதனிடையே அகிலேஸ்வரி என்பவரை திருமணம் செய்திருந்த பாலு மகேந்திரா, இரண்டாவதாக நடிகை ஷோபாவை மணந்துகொண்டார். பின்னர் மூன்றாவதாக நடிகை மெளனிகாவை திருமணம் செய்துகொண்டார் பாலு மகேந்திரா.
இயக்குநர் பாலு மகேந்திராவுக்கும் நடிகை மெளனிக்காவுக்கும் இடையில் 30 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலு மகேந்திரா மறைவுக்குப் பின்னர் வேறொரு திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் நடிகை மெளனிகா. உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படம் மூலம் தனது கேரியரை தொடங்கிய மெளனிகா, இப்போது வரையிலும் நடிப்பில் பிஸியாக காணப்படுகிறார்.
கடைக்குட்டி சிங்கம், மீண்டும் ஒரு மரியாதை, ஆனந்தம் விளையாடும் வீடு ஆகியவை மெளனிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் ஆகும். அதேபோல், நிம்மதி உங்கள் சாய்ஸ் 2, கலாட்டா குடும்பம், சொந்தம் போன்ற நாடகங்களில் நடித்த மெளனிகா, தற்போது ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலுமகேந்திராவுக்கும் அவருக்கும் இடையேயான உறவு குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில், பாலுமகேந்திரா இறப்பதற்கு முன்பாக மெளனிகாவிடம் இரண்டு சத்தியங்களை செய்ய சொன்னாராம். முதல் சத்தியம் தான் இறந்த பின்னர் உனக்கு பிடித்த இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் எனக் கேட்டாராம். அதற்கு சத்தியம் செய்த மெளனிகா அடுத்ததை மறுத்துவிட்டாராம். அது இன்னொரு திருமணம் செய்துகொள்வேன் என சத்தியம் செய்ய சொன்னதாகவும், அதற்கு மெளனிகா முடியாது என கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.