புதுடில்லி: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 50 சதவீதம் அளவிற்கு திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, மக்கள் தங்கள் வசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது.
வங்கி மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சில வரம்புகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, நபர் ஒருவர் வங்கிகள் மூலம் நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் மட்டுமே ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியும். அதேநேரத்தில் டெபாசிட் செய்ய எந்த லிமிட்டும் இல்லை.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. பணத்தை திரும்பப்பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் திரும்ப வந்துள்ளன.
அதாவது புழக்கத்தில் இருந்த 50 சதவீத நோட்டுகள் திரும்பியுள்ளன. அதில், 85 சதவீதம் வங்கி டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளன. மற்றவை வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement