ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் மோதல் உள்ளது. இதற்கிடையே தான் சச்சின் பைலட் புதிய கட்சி துவங்க தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் உதவி செய்வதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் மேலிடத்துக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட், காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த சச்சின் பைலட் ஆகியோர் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக முதல்வர் பதவி உள்ளது.
குறிப்பாக அசோக் கெலாட் மீது சச்சின் பைலட் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் இடையேயான சண்டை விஸ்வரூபமடைந்துள்ளது. இது காங்கிரஸ் மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் ராஜஸ்தானில் இரு தலைவர்களையும் சமாளிக்க காங்கிரஸ் மேலிடம் பதவி பகிர்வு பார்முலாவை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி இரு தலைவர்களும் தேர்தல் பணியை சேர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதல்வர் பதவியை இருவருக்கும் பகிர்ந்து வழங்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் சச்சின் பைலட்டுன் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதற்கிடையே தான் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனது தந்தை ராஜேஷ் பைலட்டின் நினைவு தினமான ஜூன் 11ம் தேதி சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அந்த கூட்டத்தில் அவர் புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் செய்திகள் பரவுகின்றன.
குறிப்பாக அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் சச்சின் பைலட் தரப்பினருக்கு புதிய கட்சி துவங்க உதவி செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றன. காங்கிரஸ் மேலிடத்திடத்துக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே பிரச்சனை உள்ள நிலையில் அவரது ஐ-பேக் நிறுவனம் ராஜஸ்தானில் அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையேயான தகராறில் தலையிட்டு சச்சின் பைலட்டுக்கு புதிய கட்சி துவங்கும் பணியை ரகசியமாக செய்வதாக அசோக் கெலாட் தரப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் சமூக வலைதள பதிவுகளிலும் ஐ-பேக் நிறுவனம் சச்சின் பைலட் தரப்புக்கு உதவி செய்வதாக கூறியுள்ளனர். இருப்பினும் இதனை சச்சின் பைலட் தரப்பு உறுதி செய்யவில்லை. மாறாக ஜூன் 11ம் தேதி சொந்த தொகுதியான தவுசாவில் சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட்டுக்கு நினைவஞ்சலி கூட்டம் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளையில் சச்சின் பைலட் தரப்பினர் காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருப்பதையும் ஒருவர் உறுதி செய்தார். இதுதொடர்பாக சச்சின் பைலட்டுக்கு நெருக்கமான ஒருவர், ‛‛சச்சின் பைலட் கட்சியில் எந்த பதவியிலும் இல்லை. ஆனால் அவர் கட்சிக்காக அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்கிறார். இதற்கு பலனாக அவருக்கு என்ன கிடைத்தது. மேலிடத்தின் பொய்யான உறுதிமொழிகள் தான் தொடர்ந்து கிடைக்கின்றன. இதனால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம்.
மேலும் முதல்வர் பதவியை அசோக் கெலாட் வைத்துள்ளார். இதன்மூலம் அரசு எந்திரத்தை கட்டுப்படுத்துகிறார். அதேபோல் அவரது ஆதரவாளராக கோவிந்த் சிங் தோதாஸ்ரா மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். அவர் மூலம் அசோக் கெலாட் கட்சியையும் கட்டுப்படுத்துகிறார். சச்சின் பைலட் ஆதரவாளர்கள் எதிரிகளை போல் நடத்தப்படுகின்றனர்” என்றார்.
இதனால் காங்கிரஸ் மேலிடம் ராஜஸ்தான் அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது. மேலும் சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்குகிறாரா? பிரசாந்த் கிஷோரின் தலையீடு ஏதேனும் இருக்கிறதா? என்பது தொடர்பாகவும் காங்கிரஸ் மேலிடம் விசாரிக்க தொடங்கி உள்ளது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் நிலவும் இத்தகைய பிரச்சனைகளால் காங்கிரஸ் மேலிடம் உண்மையில் கலங்கி போய் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.