கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரே மரத்தில் 165 வகையான மாம்பழகளை அறுவடை செய்து அசத்தியுள்ளார்.
கோடை காலம் வந்துவிட்டாலே மாம்பழம் ஞாபகம் வந்துவிடும். முக்கனிகளில் முதன்மையான பழமாக இருக்கும் இந்த மாம்பழத்தை சுவைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் எல்லோரும், எல்லா வகையான மாம்பழத்தையும் சுவைத்திருப்பார்களா? என்று கேட்டால், கொஞ்சம் சந்தேகம்தான். இந்த பிரச்னையை தீர்க்க மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் குஷால் கோஷ் சூப்பர் ஐடியாவை கையாண்டிருக்கிறார்.
இவருக்கு மாம்பழத்தின் மீது ஈர்ப்பு வந்ததற்கு இவருடைய ஊர்தான் காரணம். மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியானது மாம்பழங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற ஊராகும். ஆங்கிலேயர்கள் காலத்திற்கு முன்னரே இங்கு வாழ்ந்து வந்த நவாப்கள் மாம்பழம் மீது அதீத பிரியம் கொண்டிருந்தனர். சிறந்த, சுவையான மாம்பழம் கொண்டு வருபவர்களுக்கு அதற்கேற்ப சன்மானமும் வழங்கப்பட்டது.
இப்படியாக நவாப்கள் ஊர் முழுவதும் மாம்பழம் தோட்டங்கள் வளர்க்கப்படுவதை ஆதரித்தனர். நவாப்களுக்கு மாம்பழங்களை கொடுக்கவே விவசாயிகள் வித விதமான ரகங்கள் கொண்ட மாமரங்களை வளர்க்க தொடங்கினர். இப்படிப்பட்ட வரலாற்று பின்ணி கொண்ட ஊரில் வளர்ந்தவர்தான் குஷால் கோஷ். இவரும் தன்னுடைய தோட்டத்தில் விதவிதமான மா மரங்களை வளர்த்து, அதில் விளையும் பழங்களை அறுவடை செய்து வந்தார்.
அப்போதுதான் இவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. ஒரு பழத்திற்காக இத்தனை மரங்களை ஏன் வளர்க்க வேண்டும்? ஒரே மரத்தில் அத்தனை வகை பழங்களும் கிடைத்தால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்த யோசனை. இதுதான் அவரை ஆய்வாளராக மாற்றியது. மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர், முதலில் வித்தியாசமான பழ ரகங்கள் கொண்ட மரங்களை வளர்த்தார். முன்னர் அவரிடம் 100 வித்தியாசமான மா மரங்கள் இருந்தன. இந்த முறை இந்த எண்ணிக்கையை 165ஆக உயர்த்தினார்.
மரங்கள் நன்றாக பராமரிக்கப்பட்டதால் சரியான நேரத்தில் பழங்கள் கிடைத்தன. எனவே ஒரு குறிப்பிட்ட ரகம் கொண்ட மரத்தில் சுமார் 165 வகையான வேறு ரகம் கொண்ட மா கன்றுகளை இணைத்து ஒட்டுச் செடியை உருவாக்கினார். இது பலன் கொடுத்தது. கடைசியாக ஒரே மரத்தில் இவர் 165 வகையான மாம்பழங்களை அறுவடை செய்து அசத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “வெளியில் இருந்து பார்ப்பதற்கு இது ஆச்சரியமான ஒன்றாக தெரியலாம்.
ஆனால் விவசாயிகள் இதனை காலங்காலமாக செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி ஒட்டு முறையை பயன்படுத்தி வெவ்வேறு ரகமான பழங்களை அறுவடை செய்ய அதிக அளவு பொறுமை தேவை. அதேபோல கவனமாகவும் இருக்க வேண்டும். ஒட்டு முறை பல நேரங்களில் வெற்றிகரமாக இருந்தாலும், எதிர்பார்க்கும் நேரத்தில் திடீரென தோல்வியடைந்துவிடும். எனவே செடிக்கு தேவையான உரம், தண்ணீர், சீரான சூரிய ஒளி ஆகியவற்றை வழங்குவதை நாம் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். இதையும் கடந்து செடிகளை நேசிக்க வேண்டும். அப்போதுதான் அது செழிப்பாக வளரும்.
ஒவ்வொரு ஒட்டு முடியவும் எனக்கு மூன்று மாதங்கள் வரை ஆனது. பின்னர் தாய் மரம் சீராக வளர்ந்து கனிகளை கொடுக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. ஒட்டு செடி வளர்ப்பில் முக்கியமானது, இனம்தான். எந்த செடியை நாம் ஒட்டு செடியாக பயன்படுதுகிறோமோ, அந்த செடியும் தாய் செடியும் ஒரே இனமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இவர் ஏற்கெனவே 100 வெவ்வேறு வகையான பழங்களை ஒரே மரத்தில் அறுவடை செய்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கோஹிதூர், பம்பாய், ஹிம்சாகர், லாங்க்ரா, சாரங்கா, பிம்லி, பீரா, சம்பா, ராணி பசந்த், அன்னாசி, அல்போன்சா, பாஸ்லி, கோலப்காஸ், பஞ்சவர்ணம் உள்ளிட் மாம்பழ வகைகளை அவர் அறுவடை செய்திருக்கிறார்.