புதுடெல்லி
நாடு கண்ட மிகச்சிறந்த செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர் புதன் கிழமை காலமானார்.71 வயதான அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கீதாஞ்சலி ஐயர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தூர்தர்ஷனில் பணியாற்றிய இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கீதாஞ்சலி அவர்கள், நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பின் அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தூர்தர்சனில் 1971 முதல் பணியாற்றி வந்த இவர் பல தசாப்தங்களாக மக்களின் மனம் கவர்ந்த செய்தி வாசிப்பாளராக விளங்கினார். இவர் சிறந்த ஆங்கில உச்சரிப்பிற்க்கு பெயர் போனவர். செய்தி வாசிப்பில் சிறப்பாக பணியாற்றிய கீதாஞ்சலி, நான்கு முறை சிறந்த தொகுப்பாளர் விருதைப் பெற்றார்.
1989 இல் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்றார். செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி, தேசிய நாடகப் பள்ளியில் டிப்ளமோ பட்டம் பெற்றவர் ஆவார். அதுமட்டுமின்றி பல விளம்பரங்களிலும் நடித்துள்ள இவர் ஸ்ரீதர் ஷிர்சாகரின் “கந்தான்” என்கிற தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்துள்ளார் கீதாஞ்சலி.