ஒடிசாவில் பாலசோர் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 278 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கடைசி நிமிட காட்சிகள் வெளியாகி இணையத்தில் பெரிதும் வைரலாகி கொண்டிருக்கின்றன.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து
அதாவது, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக பயணம் செய்து கொண்டிருந்த போது அதில் பயணித்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் தூய்மை பணியாளர் ஒருவர் பெட்டியை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். பயணிகள் அனைவரும் தங்கள் படுக்கையில் படுத்து ஆசுவாசப்படுத்தி வருகின்றனர்.
ஒடிசா டிவி வெளியிட்ட வீடியோ
இந்நிலையில் திடீரென ரயில் குலுங்குகிறது. கேமரா ஆடுகிறது. அடுத்த சில வினாடிகளில் ஒட்டுமொத்த இடமும் இருளில் மூழ்கி விடுகிறது. பயணிகளின் அலறல் சத்தமும் பெரிதாக கேட்கிறது. இத்துடன் வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவை ஒடிசா டிவி (Odisha TV) தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
உண்மைத் தன்மை என்ன?
ஆனால் இதன் உண்மை தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. உண்மையாகவே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தான் எடுக்கப்பட்டதா? இல்லை வேறு ஏதேனும் ரயில் விபத்தில் கிடைத்ததா?
சிபிஐ விசாரணை
இல்லையெனில் போலியாக ஜோடிக்கப்பட்ட வீடியோவா? எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விபத்திற்கு சிக்னலிங் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் விரிவான விசாரணைக்கு பின்னரே காரணங்கள் தெரியவரும்.
புலனாய்வு அமைப்புகளின் கைகளில்
இந்த சூழலில் மேற்குறிப்பிட்ட வீடியோவை புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைத்து உரிய முறையில் விசாரித்து உறுதிப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.