ஒட்டாவா: பிளாக் மேஜிக்கில் நம்பிக்கை கொண்டவர்கள் வினோதமான சம்பவங்களைச் செய்வார்கள்… அப்படிச் செய்த சம்பவம் ஒன்றின் வீடியோ நெட்டிசன்கள் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது.
பிளாக் மேஜிக் எனப்படும் வசியம் வைப்பது குறித்தெல்லாம் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். இது உண்மையா என்று தெரியவில்லை என்றாலும் பலரும் இதை நம்பி, தனது எதிரிகளை வீழ்த்த இதைப் பயன்படுத்துவார்கள்.
இதற்கிடையே கனடா நாட்டில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியின் உச்சத்திற்கே எடுத்துச் செல்வதாக உள்ளது. அங்குள்ள பவல் நதி அருகே எடுக்கப்பட்ட இந்த சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ஷாக் சம்பவம்: கனடாவில் பவல் நதி அருகே வசிக்கும் கொரினியா ஸ்டான்ஹோப் என்ற 36 வயது பெண், தனக்குச் சொந்தமான இடத்தில் மான் ஒன்று உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்துள்ளார். உயிரிழந்து கிடக்கும் இந்த மானைச் சாப்பிட எந்த விலங்குகள் அருகே வருகிறது என்பதைப் பார்க்க அவர் அங்குப் பாதுகாப்பு கேமரா ஒன்றை வைத்துள்ளார். இருப்பினும், அந்த கேமராவில் பதிவான காட்சிகள் அவரை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது.
மறுநாள் காலை அங்கே வந்து பார்த்த போது, மான் உடலில் குறிப்பிட்ட பகுதி சாப்பிடப்பட்டிருந்தது. இதனால் எந்த விலங்கு நள்ளிரவில் வந்து மான் உடலைச் சாப்பிட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க கேமராவை எடுத்துச் சென்றுள்ளார். கேமராவில் பதிவான காட்சிகளை ஸ்டான்ஹோப் தனது தாத்தாவுடன் இணைந்து செக் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்தவுடன் தான் அவர் மிரண்டு போய்விட்டார்.
மான் சடலம்: அந்த வீடியோவில் இரண்டு மர்ம உருவங்கள் நீண்ட முடியுடன் வருகிறார்கள். அவர்கள் மேல்சட்டை எதையும் அணியவில்லை. கீழ் உடலை மட்டும் ஒரு துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இந்த இரண்டு பெண்களும் பார்க்கவே வினோதமாக இருக்கிறார்கள். அவர்கள், உயிரிழந்த மானை வைத்து கொடூரமான சடங்கைச் செய்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
உட்கார்ந்து அவர்கள் சடங்கு செய்கிறார்கள். இருப்பினும், அவர்களின் தலைமுடி அவர்களின் முகத்தை முழுமையாக மறைத்துவிடுகிறது. இதனால் அந்த பெண்கள் யார் எனத் தெரியவில்லை. மேலும், அவர்கள் அந்த மானில் உடலில் குறிப்பிட்ட பகுதியை எடுத்துச் சாப்பிடவும் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்தவுடன் ஸ்டான்ஹோப் நடுங்கிப் போய்விட்டார். அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
அதிர்ச்சி: அவருக்குச் சொந்தமான இடத்தில் இது நடந்துள்ளதால் எங்கு அந்த பெண் மந்திரவாதிகள் மீண்டும் வந்து தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்று ஸ்டான்ஹோப் அஞ்சியுள்ளார். இதையடுத்து ஸ்டான்ஹோப் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்தார். நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு பல வித கருத்துகளைத் தெரிவித்தனர். இந்த மர்ம பெண்கள் யாராக இருப்பார்கள் என்று ஒவ்வொருவரும் ஒரு கருத்துகளை கூறி வருகின்றனர்.
கனடா நாட்டில் சில இடங்களில் இது போல உயிரிழந்த விலங்குகளின் எலும்புகளைச் சேகரிக்கும் பழக்கம் சில தரப்பு மக்களிடம் உள்ளதாகவும் அதுபோன்ற ஒரு சம்பவமாக இது இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இருப்பினும், அவர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை என்றே தெரிகிறது.