திமுக உடன்பிறப்பால் நெகிழ்ச்சி… நாங்க 2009ஆம் ஆண்டே செஞ்சிட்டோம்- ஸ்டாலின் மாஸ் ட்வீட்!

தமிழகத்தில் உடலுறுப்பு தானம் என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தாலும், 2008ஆம் ஆண்டிற்கு பின்னர் தான் பெரிதும் கவனம் பெறத் தொடங்கியது. அதற்கு காரணம் அந்த ஆண்டில் நிகழ்ந்த ஹிதேந்திரன் என்ற சிறுவனின் மரணம். சாலை விபத்தில் சிக்கிய இவரை, மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் அனுமதித்திருந்தனர். ஆனால் மூளைச் சாவு அடைந்ததால் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து கொண்டனர்.

ஹிதேந்திரன் மரணம்

உடனே தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இது ஊடகங்களில் பெரிதாக பேசப்பட, அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூற, 108 ஆம்புலன்ஸ் அறிமுகம் எனப் பல்வேறு விஷயங்கள் அடுத்தடுத்து நிகழ ஹிதேந்திரன் வரலாற்றில் அழியா இடம் பிடித்தார். அவரது நினைவு தினம் உடலுறுப்பு தான விழிப்புணர்வு தினமாக தமிழக அரசு மாற்றும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தது.

கலைஞர் நூற்றாண்டு விழா

தற்போது ஏராளமானோர் உடல் உறுப்பு தானத்தால் புது வாழ்வு பெற்று வருகின்றனர். இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி சேலம் மத்திய மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் முரளி, தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு செய்தனர்.

நெகிழ்ச்சி

இது மக்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி தகவலறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில், எங்கும் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞரின் திட்டங்களால் இப்போதும் பல கோடிப் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக அவர் அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எண்ணற்ற ஏழை எளியோர் உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளனர்.

2009ல் நடந்த நிகழ்வு

அத்தகைய தாயுமான தலைவரது நூற்றாண்டில் தனது குடும்பத்துடன் உடலுறுப்புத் தானம் செய்ய முடிவெடுத்த சேலத்தைச் சேர்ந்த இந்தக் கழக உடன்பிறப்பின் செயலால் நெகிழ்கிறேன். கடந்த 2009-ஆம் ஆண்டே எனது துணைவியாரும் நானும் உடலுறுப்புகளைத் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துக் கையொப்பமிட்டு,

உடலுறுப்பு தானம் செய்வோம்

அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்ததை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்! மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூடவே கலைஞர் 100 என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு பேசுபொருளாக மாற்றியிருக்கிறார். இதனை பலரும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த பதிவு உடலுறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.