இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2.5 வயது சிறுமி, 50 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், அந்த குழந்தை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகிறது. ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிப்பதில் போதிய சட்டங்கள் மற்றும் கண்காணிப்பு இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும் கூட, அதைத் தடுக்க போதியளவில் நடவடிக்கை இல்லை என்றே கூறப்படுகிறது.. இதற்கிடையே அதேபோல மற்றொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
மீட்புப் பணிகள்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள செஹோர் என்ற இடத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமியை மீட்க 50 மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் போராடினர். இந்த குழந்தை 100 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது. தேசிய ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவை இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் 1 மணியளவில் இந்த சிறுமி எதிர்பாராத விதமாக 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. தொடக்கத்தில் 40 அடி ஆழத்தில் அந்த குழந்தை சிக்கியிருந்தது. அப்போது மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் உருவாக்கிய அதிர்வுகளால் குழந்தை எதிர்பாராத 100 அடி ஆழத்திற்கு விதமாகச் சரிந்தது.
முயற்சி: இருப்பினும், சிறுமியை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் தீவிரமாகப் போராடினர். இடையில் மழையும் அதீத காற்றும் கூட மீட்புப் பணிகளைத் தாமதப்படுத்தியது. மேலும், குழந்தைக்குக் குழாய் மூலம் ஆக்ஸிஜனும் வழங்கப்பட்டது.. இதற்கிடையே அங்கே இருந்த இருந்த குழந்தை திடீரென மயங்கியது. இருப்பினும், மீட்புக் குழுவினர் நம்பிக்கையைத் தளர விடாமல் குழந்தையை மீட்கும் பணிகளைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே குஜராத்தில் இருந்து வந்த ரோபோ வல்லுநர் குழுவும் மீட்புப் பணிகளில் இன்று காலை இணைந்தனர். குழந்தையின் நிலை குறித்த தகவல்களைச் சேகரிக்க ஆழ்துளைக் கிணற்றில் ஒரு ரோபோ இறக்கப்பட்டது. அந்த ரோபோ மூலம் கிடைத்த தரவுகளை வைத்து மீட்பு நடவடிக்கைகளை எடுத்தனர்.
உயிரிழப்பு: இந்தச் சூழலில் சுமார் 50 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இந்த குழந்தை இன்று மாலை மீட்கப்பட்டது. அப்போது மயக்கமாக இருந்த நிலையில், குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே அந்த குழந்தை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.