நள்ளிரவில் பயங்கரம்.. ஒடிசாவில் துர்க்-பூரி ரயிலில் ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து! என்ன நடந்தது

புவனேஷ்வர்: ஒடிசாவில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தின் துயரமே ஆறாத நிலையில், இப்போது அங்கே மிக மோசமான மற்றொரு விபத்து அரங்கேறியுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியது. இப்படி மூன்று ரயில்கள் சிக்கியதே இந்த விபத்து மிக மோசமாக மாற காரணமாக அமைந்தது.

மொத்தம் 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கிய நிலையில், 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், இன்டர்லாங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின்னரே உண்மை தெரிய வரும்.

இதனிடையே ஒடிசாவில் இப்போது மற்றொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. அங்கே பூரி-துர்க் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள காரியார் சாலை அருகே சென்ற போது அங்கே உள்ள ஏசி பெட்டிகள் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

பிரேக் ஷூவில் ஏற்பட்ட சில கோளாறுகள் காரணமாக ஏசி பெட்டிகள் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கிழக்கு மத்திய ரயில்வே பிரிவு கூறுகையில், “காரியார் சாலை நிலையத்தில் 10 மணிக்கு வந்த போது 18426 ரயிலின் B3 பெட்டியில் உராய்வு காரணமாக பிரேக் பேட்கள் தீப்பிடித்தன. கோச்சின் உள்ளே தீ பரவவில்லை. பிரேக் பேட்களில் மட்டுமே தீப்பிடித்திருந்தது.. வேறு எந்த சேதமும் இல்லை. பிரச்சனை சரி செய்யப்பட்டு, இரவு 11 மணிக்கு ரயில் புறப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தில் ஆறு தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மறுநாளே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.