திருச்சி : மேட்டூர் அணை திறப்பையொட்டி, தீவிரமாக நடைபெறும் தூர்வாரும் பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். லால்குடியை அடுத்த செங்கரையூர் கிராமத்தில் கூழையாற்றில் 15 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் சிறு, குறு வாய்க்கால்களில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நீர்வளத்துறையின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் இன்று ஆய்வு செய்து வருகிறார்.
தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.
காலை 9 மணிக்கு தஞ்சாவூர் அடுத்த ஆலக்குடி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலை முத்துவாரி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், விண்ணமங்கலத்தில் கால்வாய் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் திருச்சி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், செங்கரையூர் கூழையாற்றில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
கூழையாற்றில் ரூ.23 லட்சம் மதிப்பில் சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, வெள்ளனூரில் நந்தியார் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு விட்டு இன்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.