ஜியோ ஏற்படுத்திய தாக்கம், ஹாட்ஸ்டார் அதிரடி முடிவு:: ஆசிய கோப்பை மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலகக் கோப்பை 2023 தொடர்களை டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வாடிக்கையாளர்கள் இலவசமாக பார்க்கலாம் என டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமாவுக்கு போட்டியாக நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.
உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோ, கடந்த சில மாதங்களாக விளையாட்டுப் போட்டிகளை ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் மூலம் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. இதில் சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பியது என்பதும் இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் ஜியோ சினிமாவில் கிரிக்கெட் போட்டிகளை பார்த்தனர் என்பதும் தெரிந்ததே. அத்துடன் இந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டி முடிந்த பின்னரும் தற்போது லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்கள் ஜியோ சினிமாவில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது கிரிக்கெட் உலகில் முக்கிய தொடராக பார்க்கப்படும் ஆசிய கோப்பை மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலகக் கோப்பை 2023 தொடர்களை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இலவசமாக ஒளிபரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த சலுகை மொபைல் பயனாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே ஜியோ சினிமாவின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் தற்போது இலவசமாக கிரிக்கெட் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காசு கட்டினால் தான் இணையதளத்தில் இலவசமாக கிரிக்கெட் போட்டியை பார்க்க முடியும் என்ற நிலையை அம்பானியின் ஜியோ நிறுவனம் தான் மாற்றிவிட்டதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அத்துடன் ரிலையன்ஸின் Viacom18 ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை 2023 முதல் 2027 வரை சுமார் $2.9 பில்லியனுக்கு வென்றது, இது முன்னதாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் வைத்திருந்த உரிமம் ஆகும்.
இதற்கிடையில் இது தொடர்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தலைவரான சஜித் சிவானந்தன் Exchange4 மீடியாவிடம் அளித்த பேட்டியில கூறியதாவது, “இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி துறையில் முன்னணியில் தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்மூலம் எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறோம். அந்தவகையில் ஆசிய கோப்பை மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களை இலவசமாக ஒளிபரப்புவதன் மூலம் அதிக பார்வையாளர்களை கொண்டு வரலாம். இதன்மூலம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த அமைப்பை வளர்க்க எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.