புவனேஸ்வர்:
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசுப் பள்ளி வகுப்பறைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருப்பதால் அங்கு படிக்கும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இனி அந்தப் பள்ளிக்கு எங்கள் பிள்ளைகளை நாங்கள் அனுப்ப மாட்டோம் என அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் கூறிவிட்டதால் என்ன செய்வது என தெரியாமல் பள்ளிக்கல்வித்துறை திணறி வருகிறது.
ஒடிசாவில் கடந்த வாரம் நேரிட்ட ரயில் விபத்து இந்தியாவையே அதிரச் செய்தது. கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், எதிரே வந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி தடம்புரண்டது.
அந்த நேரம் பார்த்து, பக்கத்து தண்டவாளத்தில் பயங்கர வேகத்தில் வந்த பெங்களூர் – ஹவுரா ரயில் இந்த தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த கோர விபத்தில் இதுவரை 295 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியிருக்கும் என தகவலறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பஹனபஜாரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் முதலில் வைக்கப்பட்டன. கோடை விடுமுறை என்பதால் உடல்கள் இங்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அடையாளம் தெரிந்த சடலங்கள் உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டன. மற்ற சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு 3 நாட்களாக அந்த பள்ளியின் வகுப்பறைகளில் தான் சடலங்கள் வைக்கப்பட்டிருந்தனன.
இதனிடையே, வரும் 12-ம் தேதியுடன் கோடை விடுமுறை முடிவடைவதை ஒட்டி, அந்தப் பள்ளியை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் பள்ளிக்கு வர மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பயப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி வகுப்பறைகளில் உருக்குலைந்த, கோரமான சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதை தாங்கள் பார்த்ததால் இனி எங்கள் பிள்ளைகளை நாங்கள் அப்பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள், பெற்றோர்கள் இவ்வாறு தெரிவிப்பதால் இனி என்ன செய்வது என்று தெரியாமல் ஒடிசா பள்ளிக்கல்வித்துறை விழிப்பிதுங்கி நிற்கிறது. மாணவர்கள், பெற்றோர்களிடம் பல முறை பேசி பார்த்தும் பலனளிக்காததால் அந்தப் பள்ளியை இடித்து வேறு பள்ளியை கட்டுவதை தவிர வேறு வழியில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதுவரை இந்த பள்ளி மாணவர்களை எங்கு படிக்க வைப்பது என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.