பட்டமளிப்பு விழாவை சனாதன மதவெறி கொள்கைகளை பரப்பும் களமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைப்பதால்தான் குளறுபடிகள் நிகழ்கின்றன என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி தற்பொழுது மாணவர்கள் வாழ்விலும் விளையாடுகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன இந்துத்வா கருத்துகளையும், ஆளும் அரசை விமர்சித்து எல்லை மீறுகிறார் ஆளுநர் என சமீபத்தில் கூட இயக்க தந்தை வைகோ விமர்சித்திருந்தார்.
பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தேதி வழங்க வேண்டுமென்றால் ஒன்றிய அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவேண்டும் என ஆளுநர் விரும்புவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். கலந்துரையாடல் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என நிர்பந்திப்பதாக தகவல் வருகின்றது. ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது?
மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியும் இதர தரம்களும் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தற்காலிக பட்ட/பட்டய சான்றிதழ்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது.
மேற்படி மதிப்பெண் மற்றும் பட்ட/பட்டய சான்றிதழ்களை அங்கீகரித்து ஒப்பளிக்கும் உரிமை பல்கலைக் கழக வேந்தரான ஆளுநர்களுக்கு தான் உண்டு. அந்த வகையில் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஒரு மாணவருக்கு பட்ட/பட்டய சான்றிதழ்கள் வழங்க முடியும்.
மரபு வழியாக ஆளுநர் தலைமையில்தான் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழா தேதி முடிவானவுடன் அந்தநாளிலோ அல்லது அதற்கு முந்தைய நாட்களிலோ ஒப்பளிப்பு கூட்டம் நடத்தப்பட்டு கையெழுத்து பெறப்படும். பாஜக ஆளுநர்கள் வரும் வரை இதில் எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை. பட்டமளிப்பு விழாவில் பல்கலை வேந்தரான ஆளுநரோ, இணை வேந்தரான உயர்கல்வி அமைச்சரோ பேரூரை ஆற்றுவதில்லை. ஆளுநர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி அழைக்கப்படும் சிறப்பு விருந்தினரே மாணவர்களிடம் உரை நிகழ்த்துவார்.
இங்குதான் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் ஒன்றிய அமைச்சர்களை அழைக்க வேண்டும், சனாதன கொள்கைகளை பேசக்கூடிய வடக்கத்திய தலைவர்களை அழைக்கவேண்டும் என நிர்பந்தபடுத்துகிறார். அவர்கள் தரும் தேதியும் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தேதியும் ஒத்துபோகவேண்டும். அதனாலும் கால விரயம் ஏற்படுகிறது.
பட்டமளிப்பு விழாவில் அந்த பகுதி இளைஞர்கள் ஒரே கூரையின் கீழ் கூடும் நிகழ்வு. அந்த நிகழ்வை தங்கள் சனாதன மதவெறி கொள்கைகளை பரப்பும் களமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நினைப்பதால்தான் இத்தகைய குளறுபடிகள் நிகழ்கின்றன. பல்கலை கழகங்கள் தரும் தற்காலிக பட்ட / பட்டய சான்றிதழ்கள் ஆறுமாதம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படுத்தும் காலதாமதத்தால் 9.29 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கடினமாகும்.
இது குறித்து நான் ஏப்ரல் 1ஆம் தேதி செய்தியாளர்களுக்கு விரிவாக பேட்டி அளித்திருந்தேன் அதை மீண்டும் நினைவு கூறுகிறேன், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கல்லூரி வளாக நேர்முக தேர்வில்(campus interview)வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள் ஆறு மாத காலத்திற்க்குள் பட்ட/பட்டய படிப்பு முடித்த சான்றிதழை தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் சமர்பிக்க விட்டால் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும், எண்ணற்ற மாணவர்கள் ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கிடைத்த வேலை வாய்ப்பையும் இழந்துள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறுப்பிட்டுள்ளார்.