சென்னை: டாடா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன.
அனிருத் இசையில் டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கும் படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருந்த படத்தில் கவின் கமிட்டாகிவிட்டதாக ஷாக்கிங் அப்டேட் கிடைத்துள்ளது.
தனுஷுக்குப் பதில் கவின்:விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான கவின் அப்படியே படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு கவினுக்கு ஹீரோவாகும் வாய்ப்பு தேடிவந்தது. லிஃப்ட் படத்தைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான டாடா சூப்பர் ஹிட் அடித்தது.
இதனால், கவினின் அடுத்தப் படம் செம்ம ஜாக்பாட்டாக அமைந்தது. அதன்படி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். அதேபோல், அயோத்தி படம் மூலம் பிரபலமான ப்ரீத்தி அஸ்ரானி கவின் ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில் கவினின் இன்னொரு படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் சைலண்டாக நடந்து வருகிறதாம். கவினின் ஐந்தாவது படமாக உருவாகும் இதனை எலன் இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது. பியார் பிரேமா காதல் படம் மூலம் பிரபலமான எலன், அடுத்து ஸ்டார் என்ற டைட்டிலில் ஒரு படத்தை இயக்கவிருந்தார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார்.
ஹரிஷ் கல்யாணின் செம்ம ஸ்டைலான போஸ்டருடன் ஸ்டார் படத்தின் அப்டேட்டை வெளியிட்டிருந்தார் இலன். அந்த போஸ்டரில் தளபதி படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி லுக்கில் மாஸ் காட்டினார் ஹரிஷ் கல்யாண். சின்ன ஆர்ட்டிஸ்ட் முன்னணி நட்சத்திர நடிகராக மாறுவது தான் இப்படத்தின் கதை எனவும் சொல்லப்பட்டது. தளபதி ரஜினி லுக்கில் இருந்த போஸ்டரும் இந்த தகவலை உறுதி செய்திருந்தது.
ஆனால், கதை நன்றாக இருப்பதால் ஹரிஷ் கல்யாணுக்குப் பதில் தனுஷை வைத்து இப்படத்தை எடுக்கலாம் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாம். அதனால், ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின. மேலும், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதனால் தனுஷ் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தனுஷுக்குப் பதிலாக கவின் கமிட்டாகிவிட்டதாகவும், படப்பிடிப்பும் 9 நாட்கள் வரை முடிந்துவிட்டதாகவும் ஷாக்கிங் அப்டேட் வெளியாகியுள்ளது. அதேபோல், கவின் நடிப்பில் உருவாகும் ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.