சென்னை: வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நிய வர்த்தக துறை தலைமை இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பாணையில், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப், பாலகிருஷ்ண பட் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த மனுக்களில், “வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு நாய்கள் பாதிக்கப்படும் என்று எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும், புள்ளிவிவரங்களும் இல்லாத நிலையில் இந்த அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்த உத்தரவில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைபடுத்தி, பரிசோதித்த பிறகுதான் அனுமதி வழங்கப்படுகிறது. உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறும் காரணத்தில் நியாயமில்லை.இந்திய நாய்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்துதான் அந்த இலக்கை எட்ட முடியும் என்பதில்லை. அதேசமயம், வர்த்தக ரீதியில் நாய்கள் இறக்குமதி செய்வதை முறைப்படுத்தலாம் எனக் கூறி, மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக தமிழ் விலங்குகள் நல வாரியம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைகழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான விதிகளை 8 வாரத்தில் வகுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக ஆகஸ்ட் 5ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.