மதுரை திருமங்கலம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த பாம்பு கடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சகோதரியான மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் உயிரை மாய்த்த நிலையில் அந்த குடும்பத்தை துரத்தும் துயரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மனைவி நாகலட்சுமி, 100 நாள் வேலைதிட்ட பொறுப்பாளராக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனது 5 மகள்களுக்காக, கோயம்புத்தூர் வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊரில் தங்கிய நாகலெட்சுமியின் கணவர் கணேசன், விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை மாலை, வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்து தண்ணீர் தொட்டியில் அவரது மகள்களான 4 வயது சண்முகப் பிரியாவும், 9 வயது விஜயதர்ஷினியும், இறங்கி நீராடி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அந்த சமயம், தொட்டிக்குள் இருந்த நாகப்பாம்பு சிறுமிகளை கடித்ததாக கூறப்படுகிறது.
மயக்கநிலைக்குச் சென்ற சிறுமிகளை மீட்ட குடும்பத்தினர், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவரில், 4 வயது சிறுமியான சண்முகப் பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு சிறுமி விஜயதர்ஷினி உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் சோகம் மறைவதற்குள்., ஐம்பது நாட்களில், பாம்பு கடித்து 4 வயது மகள் இறந்திருப்பது, குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடை விடுமுறையில் உள்ள குழந்தைகள் மீதான பெற்றோரின் கண்காணிப்பு எந்தளவிற்கு முக்கியம் என்பதை, மீண்டும் உணர்த்தியிருக்கிறது, இந்தச் சம்பவம்….