திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வத்தலகுண்டு-மதுரை ரோட்டில் உள்ள அண்ணாநகர் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் இரவு கடையை அடைத்துச் செல்வதற்குமுன், மறுநாள் காலை வியாபாரத்திற்காக வைத்திருக்கும் காய்கறிகள் தொடர்ச்சியாக திருட்டுப் போனது.
இதனால், செந்தில்குமார் தன்னுடைய கடையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வந்தார். இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குமுன், வழக்கம் போல அதிகாலையில் வந்து கடையை திறந்தப் பார்த்தபோது, காய்கறி மூட்டைகள் பிரிக்கப்பட்டிருந்தன. அப்போது நள்ளிரவு பதிவான சிசிடிவி காட்சிகளை எடுத்துப் பார்த்த செந்தில்குமார் அதிர்ச்சியடைந்திருக்கிறார். காரணம், அதில் இருந்தது தன்னுடைய கடைக்கு எதிரே பாஸ்ட் ஃபுட் கடை நடத்திவரும் கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது.
இது குறித்து செந்தில்குமார் வத்தலகுண்டு போலீஸாரிடம் புகாரளித்தார். அப்போது செந்தில்குமார் அளித்த சிசிடிவி பதிவுகளைப் போலீஸார் பார்த்தனர். அதில், நள்ளிரவில் காய்கறி கடைக்குள் சாக்கு பையுடன் கிருஷ்ணகுமார் புகுந்து சாவகாசமாக தனக்கு தேவையான காய்கறிகளை எடுக்கிறார். எவ்வித பதற்றமும் இல்லாமல் கடையில் சென்று வாங்குவது போல் முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், தேங்காய் ஒவ்வொன்றாக தரம் பார்த்து எடுத்து பையினுள் போடுகிறார்.
தனக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் சாக்கில் நிரப்பிக் கொண்டு கிளம்பும் தருவாயில் எதிர்பாராதவிதமாக நிமிர்ந்து பார்த்தபோது, புதிதாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது தன் நெஞ்சில் கை வைத்துவிட்டு கதவின் ஓரமாக மறைகிறார். இருப்பினும், ஆனது ஆச்சு பார்த்துக்கலாம் என்ற மனநிலையில் மறைந்திருந்தவாறு கைகளை மட்டும் நீட்டி திருடிய காய்கறி சாக்கு பையை இழுத்துக்கொண்டு கடையை விட்டு வெளியேறுகிறார்.
இதையடுத்து போலீஸார் கிருஷ்ணகுமாரை வரவழைத்து விசாரித்தபோது, அவர் வத்தலகுண்டு பகுதியில் பாஸ்ட் ஃபுட் கடை ஒன்றில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து கிருஷ்ணகுமார் கடந்த 3 மாதங்களுக்கு முன் தான் சொந்தமாக பாஸ்ட் ஃபுட் கடை தொடங்கியிருக்கிறார். மேலும் தன்னுடைய கடைக்கு தேவையான காய்கறிகளை செந்தில்குமார் கடையில் தான் வாங்கி வந்திருக்கிறார். மிகவும் பழக்கமானவர் என்பதால் கடையில் புகுந்து சாவகாசமாக காய்கறிகளை திருடியிருக்கிறார். புதிதாக தொடங்கிய கடையில் பெரிய லாபம் இல்லாததால் காய்கறி வாங்க முடியாமல் திருடியிருப்பது தெரியவந்தது.
இரு தரப்பையும் அழைத்து விசாரித்த போலீஸார், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு தொகையை பெற்றுதந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதியாமல் விட்டுவிட முயன்றனர். இதற்கிடையே, காய்கறி திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் பரவியது. இதனால் வேறுவழியின்றி வழக்கு பதிவுசெய்த போலீஸார்கிருஷ்ணகுமாரைக் கைதுசெய்தனர்.