சிகார்: அரசியல் நோக்கங்களுக்காக அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானின் சிகார் நகரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய அசோக் கெலாட், மத்திய அரசு அரசியல் நோக்கங்களுக்காக அமலாக்கத் துறையைப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது: “ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை கடந்த திங்கள்கிழமை சோதனை நடத்தியது. ராஜஸ்தானில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், இதுபோன்ற சோதனைகள் வரும் என்பதை நான் எதிர்பார்த்தேன். அமலாக்கத் துறை அதிகாரிகள் அழுத்தத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். இதுபோல் அழுத்தத்தின் கீழ் பணியாற்றாதீர்கள் என நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பாஜக கூறுகிறது. ஆனால், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது வேறு விஷயம். யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். ராஜஸ்தானின் முதல்வராக யார் வர வேண்டும் என்பதை நீங்கள் (மக்கள்) முடிவு செய்யுங்கள். நாங்கள் என்ன என்ன திட்டங்களைக் கொண்டு வந்தோமோ அவை தொடர, உங்களின் ஆசியை நாங்கள் வேண்டுகிறோம்” என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.
அமலாக்கத் துறை விசாரணை பின்னணி: ராஜஸ்தானில் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வின் வினாத்தாள் கசிய விடப்பட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தே தாங்கள் விசாரணை நடத்தியதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.