சென்னை: Maaveeran (மாவீரன்) சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மாவீரன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
அனூதீப் இயக்கத்தில் வெளியான பிரின்ஸ் படம் கொடுத்த மாபெரும் அடிக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்துவிட்டு பிரின்ஸ் கொடுத்த தோல்வியை எஸ்கே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாவீரன் மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கையில் அவர்கள் இருக்கின்றனர்.
மடோன் அஸ்வின்: மடோன் அஸ்வின் மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். யோகிபாபுவை வைத்து காமெடியுடன் சமூக அக்கறையுள்ள விஷயத்தை அந்தப் படத்தில் பேசி கவனம் ஈர்த்தார். அதுமட்டுமின்றி அப்படத்துக்காக தேசிய விருதையும் வென்றார். எனவே மடோன் அஸ்வின் நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார் என பலர் கணித்திருக்கின்றனர்.
மாவீரனில் யார் யார்?: இப்படிப்பட்ட சுழலில்தான் மாவீரனை இயக்கியிருக்கிறார் அஸ்வின். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். மிஷ்கினுக்கான போர்ஷன் சமீபத்தில்தான் முடிவடைந்தது. சமீபத்தில் கொடுத்த பேட்டியில் மடோனை மிஷ்கின் ஏகத்துக்கும் புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றி கட்டாயம்: இரண்டு படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாய் வசூலித்தாலும் பிரின்ஸ் கொடுத்த மரண அடி சிவகார்த்திகேயனையும், அவரது ரசிகர்களையும் கொஞ்சம் ஆட்டம் காண வைத்தது. எனவே மாவீரன் படத்தின் மூலம் ஒரு வெற்றியை அறுவடை செய்ய தயாராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். படம் ஜூலை மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
எப்போது ரிலீஸ்: மாவீரன் படம் முதலில் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. எனவே மாவீரன் படத்தை ஒரு மாதம் முன்னதாக அதாவது ஜூலை மாதம் 14 தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவித்தது.
ரெட் ஜெயண்ட்: இந்நிலையில் மாவீரன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுவதற்கான உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முன்னதாக சிவகார்த்திகேயன் சில நாட்களுக்கு முன்புதான் மாவீரன் படத்துக்கான டப்பிங்கை முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.