WTC Final: கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு தானா… இந்தியாவின் வெற்றிக்கு வழி என்ன?

WTC Final 2023 Day 3 Highlights: இங்கிலாந்தின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து, மூன்றாவது நாளான இன்றும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. 

ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை முதல் இன்னிங்ஸில் அடித்தது. மறுபுறம், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான ரோஹித், கில், புஜாரா, கோலி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா தடுமாற்றம் கண்டது. ஜடேஜா, ரஹானே, ஷர்துல் ஆகியோரும் பொறுப்பான ஆட்டம் இந்தியாவை மதிக்கத்தக்க ஸ்கோருக்கு கொண்டு வந்தது.

‘லார்டு’ தாக்கூர் சாதனை

இன்றைய முதல் செஷனில், ரஹானே – ஷர்துல் ஜோடி சிறப்பாக செயல்பட்டு 109 ரன்களை குவித்தது. இருப்பினும், இந்த வலுவான பார்ட்னர்ஷிப்பை கேப்டன் கம்மின்ஸ் உணவு இடைவேளைக்கு பின்னான சிறிது நேரத்திலேயே பிரித்தார். ரஹானே 89 ரன்களில் ஆட்டமிழந்த வெளியேற, அடுத்து வந்த உமேஷ் யாதவும் விரைவாக பெவிலியன் திரும்பினார். 

ஓவல் மைதானத்தில் தொடர்ந்து தனது மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்த ஷர்துல் தாக்கூர் சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அல்லாத ஒருவர் தொடர்ந்து அரைசதம் அடித்த பட்டியலில் ஷர்துல் தாக்கூர் இரண்டு ஜாம்பவான்களுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார். ஆஸ்திரேலியாவின் சர் டான் பிராட்மேன், ஆலன் பார்டர் ஆகியோருக்கு பிறகு ஷர்துல் தாக்கூர் தான் ஓவல் மைதானத்தில் தொடர்ந்து 3ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். ஷமியும் அடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 173 ரன்கள் பின்தங்கியிருந்தது. கம்மின்ஸ் 3, ஸ்டார்க், போலாண்ட், க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

ஜடேஜா கொடுத்த திருப்புமுனை

வார்னர் – கவாஜா ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர். வார்னர் சிராஜ் பந்தில் விரைவாக ஆட்டமிழந்தார். சிறிதுநேரம் தாக்குபிடித்த கவாஜாவும் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதுவரை நிதானம் காட்டிய ஆஸ்திரேலியாவுக்கு, ஸ்மித் உத்வேகம் அளிக்கும் வகையில் ரன்களை குவிக்க தொடங்கினார். அவர் 47 பந்துகளிலேயே 34 ரன்களை குவித்த நிலையில், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த இன்னிங்ஸில் வெறியாட்டம் காட்டிய ஹெட்டும் விரைவாக ரன்களை குவிப்பதில் கவனமாக இருந்தார். ஆனால், இம்முறை 18 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார். 

தொடர்ந்து, இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி (44 ஓவர்கள்) 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்துள்ளது. அதாவது, ஆஸ்திரேலியா இந்திய அணியை விட 296 ரன்கள் முன்னிலையில் உள்ளது. லபுஷேன் 41 ரன்களுடனும், கிரீன் 7 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்தியா பந்துவீச்சில் ஜடேஜா 2, சிராஜ், உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

ஆஸ்திரேலியாவின் பிளான் என்ன?

தற்போதைய சூழலில், ஆஸ்திரேலியா மிக வலுவான சூழலில் உள்ளது. அந்த அணி நாளைய ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவிப்பத்தில் கவனத்தை செலுத்தும். குறிப்பாக, புது பந்தில் நிதானம் காட்டிவிட்டு, பந்து பழையதானவுடன் விரைவாக ரன் குவிக்கும் யுக்தியை கைக்கொள்ளலாம். லபுஷேன், கிரீன், கேரி என மெயின் பேட்டர்கள் இருந்தாலும் ஸ்டார்க், கம்மின்ஸ், லயான் என டெயிலெண்டர்கள் அதிரடியாக ரன்களை வரவழைப்பதில் கில்லாடிகள் தான். அவர்கள் இரண்டு செஷன்கள் முழுமையாக பேட்டிங் செய்ய முயலுவார்கள். 

இந்தியாவால் வெற்றி பெற முடியுமா?

எனவே, இந்திய அணி நாளைய முதல் செஷனிலேயே ஆஸ்திரேலியாவை ஆல்-அவுட்டாக்க முயல வேண்டும். குறைந்தபட்சம் 350 – 380 ரன்கள் இலக்கை பெற்றால் தான் இந்தியா வெற்றிக்கு போராட முடியும். மாறாக, நாளை இரண்டு செஷன்கள் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்துவிட்டால், பின் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே முடியாது. ஆடுகளம் நல்ல பவுண்சிங்கை வழங்குவதால், அதற்கேற்ப திட்டத்தை செயல்படுத்த முனைய வேண்டும். நாளைய ஆட்டம் இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். அவர்களை 350 ரன்கள் முன்னிலையோடு ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் வெற்றிக்கோ அல்லது டிராவுக்கோ இந்தியாவால் போராட முடியும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. 

மேலும் படிக்க | WTC Final 2023: போட்டியின் இரண்டாம் நாளில் ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, முகமது சிராஜின் சாதனைகள்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.