வாஷிங்டன்,-அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை திருடிச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்நாட்டு முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2016ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
நான்கு ஆண்டுகள் இவர் பதவி வகித்த நிலையில், 2020ல் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, வெள்ளை மாளிகையை காலி செய்த டிரம்ப், அங்கிருந்த ‘கிளாசிபைடு டாக்குமென்ட்ஸ்’ என கூறப்படும் மிக முக்கியமான ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப், அரசு மற்றும் நீதித் துறையை கடுமையாக விமர்சித்துஇருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் டிரம்ப் மீது, அந்நாட்டு நீதிமன்றம், அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றது, சதித் திட்டம் தீட்டியது, நீதித் துறையின் செயல்பாட்டை முடக்கியது உட்பட ஏழு பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், ஏற்கனவே இவர் மீது குற்றச்சாட்டு பதிவான நிலையில், இது இரண்டாவது குற்றச்சாட்டாகும்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பரில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ள டிரம்ப், இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் மீது அரசு ஆவணங்களை திருடிய விவகாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது, பெரும் பின்னடைவை ஏற்படுத்து உள்ளது.
இது குறித்து டிரம்ப் கூறுகையில், ”நான் அப்பாவி. என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் 13ம் தேதி நான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
”இது, அமெரிக்காவுக்கு கருப்பு நாள். அமெரிக்கா இப்போது சரிவில் இருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து நாட்டை மீட்டெடுப்போம்,” எனக் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்