தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஒருவாரம் காலம் தாமதமாக தொடங்கியுள்ளது. படிப்படியாக தமிழகத்திலும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் தலைமையில் இன்று (ஜூன் 9) முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
தஞ்சையில் ஆழங்கட்டி மழை;பொதுமக்கள் மகிழ்ச்சி:வைரல் வீடியோ
இறையன்பு தலைமையில் ஆலோசனை
இதில் தென் மண்டல வானிலை இயக்குநர் பாலச்சந்திரன், கடலோர காவல்படை உயர் அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை துறை உயர் அதிகாரிகள், தமிழக உள்துறை செயலாளர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதுதவிர பள்ளிக்கல்வித் துறை, வீட்டுவசதித் துறை, நிதித்துறை உள்ளிட்டவற்றின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
துறை சார்ந்த செயலாளர்கள்
மேலும் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எப்படி எதிர்கொள்வது, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள், துறை வாரியாக அளிக்க வேண்டிய பங்களிப்புகள் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டன. தற்போது அரபிக்கடலில் ’பிப்பர்ஜாய்’ என்ற புயல் உருவாகியுள்ளது.
பிப்பர்ஜாய் புயல்
இது மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டது. இது மேலும் வலுவடைந்து வடக்கு – வடமேற்கு திசையில் அடுத்த 3 நாட்களுக்கு நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்திலும், அதனை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் மழை
தமிழகத்தை பொறுத்தவரை வரும் 12ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அதேசமயம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும். இதில் 4 டிகிரி வரை செல்லும் என்பது சற்றே கலக்கத்தை ஏற்படுத்துகிறது. புயல் மற்றும் மழை காரணமாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சூறாவளி காற்று
அதன்படி, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் உள்ளிட்டவற்றில் சூறாவளி காற்று வீசும். மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.