சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே 3 கி.மீ., நடந்து சென்று விவசாய கிணற்றில் கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
தர்மபட்டி கொண்டபாளையம் ஊராட்சி தேனம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு கட்டப்பட்ட 20,000 லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 3 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. மேலும் மோட்டார்கள் பழுதானதால் இங்குள்ள 4 சின்டெக்ஸ் தொட்டிகளும் பயன்பாடின்றி உள்ளன.
காவிரி கூட்டு குடிநீர்த் திட்ட குடிநீரும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. அப்பகுதி மக்கள் தினமும் மூன்று கி.மீ., தூரம் நடந்து சென்று விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் மற்ற பணிகளுக்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி கூறியதாவது: எங்கள் பகுதி முழுவதும் நிலத்தடிநீர் உவர்ப்பாக உள்ளது. இதனால் வெளியில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் ஆழ்த்துளை கிணறு அமைத்து இணைப்பு கொடுக்காததால் பயன்பாடின்றி உள்ளது. குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் காவிரி குடிநீரும் வரவில்லை.
4 சின்டெக்ஸ் தொட்டி மோட்டார்களும் பழுதாகிவிட்டதால் தண்ணீருக்காக நாங்கள் தினமும் அலைந்து வருகிறோம். இதனால் விவசாய பணிகள், கூலி வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
:::