புதுடெல்லி: கடந்த 9 ஆண்டுகளில், நாட்டின் சுகாதார கட்டமைப்பை மோடி அரசு மாற்றியமைத்துள்ளது. ஏழைகளுக்கு ஆரம்ப நிலை முதல் மூன்றாம் நிலை வரை ரூ.5 லட்சத்துக்கு இலவச சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை என்ற திட்டம் கடந்த 9 ஆண்டுகளில், நாட்டில் சுகாதார கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. ஏழைகளுக்கு ஆரம்ப நிலை முதல் மூன்றாம் நிலைவரை ரூ.5 லட்சத்துக்கு இலவசமருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மருத்துவ சிகிச்சை அனைவருக்கும் பொதுவானது என்ற நிலையை இந்தியாஅடைந்துள்ளது. அனைவருக்கும் மருத்துவ சிசிச்சை கிடைக்கும் வகையில், தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி மேம்படுத்தியுள்ளார்.
கரோனா தடுப்பூசி விவரம், தொலைதூர மருத்துவ சேவை, மருத்துவமனையில் முன்பதிவு, சிகிச்சைக்கான ஆவணங்கள் ஆகியவை மக்களின் விரல் நுனியில் தற்போது உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தியது, மருத்துவ சிகிச்சைக்கு மோடி அரசு மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கை. இதன் மூலம் தகுதியான குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை உறுதியான பலன் கிடைக்கிறது. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைகளை பெறவும் இத்திட்டம் பயன்படுகிறது.
உச்சவரம்பு கிடையாது: இத்திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வயது ஆகியவற்றுக்கு உச்சவரம்பு கிடையாது. பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை உறுதிசெய்யப்படுகிறது. மருத்துவமனையில் சேர்வதற்கு முன்னும், பின்னும் ஏற்பட்ட செலவுகளையும், இந்த பாலிசி எடுக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பெறலாம். இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனைக்கு சென்றதற்கான போக்குவரத்து செலவும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.