பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார்
சென்னை: தன் மீது பொய் புகார் அளித்து, அவதுாறு பரப்பி வரும் பிரான்ஸ் நாட்டு பெண் மீது, திரைப்பட இயக்குனர் கோபி நயினார், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
'அறம்' திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர், இயக்குனர் கோபி நயினார், 53. இவர், கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு: கங்காதரன் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் தயாரிப்பில், என் சொந்த கதையை 'கறுப்பர் நகரம்' என்ற பெயரில் திரைப்படமாக இயக்கி வருகிறேன். கங்காதரனிடமிருந்து படம் தயாரிப்பு உரிமையை, ஹனீஸ் என்பவர் வாங்கினார். இவருடன், விஜய் அமிர்தராஜ் இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.
இயக்குனர் என்ற முறையில் பட தயாரிப்பு அலுவலகத்திற்கு சென்ற போது, பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சியாமளா யோகராஜா என்பவரை, விஜய் அமிர்தராஜ் எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, தன் தம்பிக்கு நடிக்க வாய்ப்பு அளிக்குமாறு, சியாமளா யோகராஜா என்னிடம் கேட்டார். அப்போது, என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின், எங்களுக்குள் எந்தவித கொடுக்கல், வாங்கலும் இல்லை. 'கறுப்பர் நகரம்' திரைப்படம் இதுவரை நான்கு தயாரிப்பாளர்களுக்கு கைமாறியுள்ளது. தயாரிப்பாளர்கள் யாரிடம் பணம் வாங்குகிறார்கள் என்பது எனக்கு தெரியாது.
இந்நிலையில், நான் பண மோசடி செய்து விட்டதாகவும், என் இயக்கத்தில் படம் தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் தயங்குவதாகவும், இன்னும் பல பொய் புகார்களைக் கூறி, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதுாறு பரப்பி வருகிறார். சியாமளா யோகராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.