புதுடெல்லி: ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும், அதன் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் இந்தியா வந்துள்ளார். அவரது உலக பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு அவரது வருகை அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று இந்தியா வந்த அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசி இருந்தார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இந்திய விவசாயி சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு சாட்பாட் அறிமுகமான வெகு சில நாட்களில் பயன்படுத்திய நிஜக்கதை ஒன்றை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
“உலக நாடுகளில் சாட்ஜிபிடி பயன்பாட்டை ஏற்றுக்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சாட்ஜிபிடி உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரம் அது. அப்போது இந்தியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சாட்ஜிபிடி-யை பயன்படுத்தியது குறித்து நாங்கள் அறிந்து கொண்டோம்.
அவரால் அரசு சேவையை ஆக்செஸ் செய்ய முடியவில்லை எனத் தெரிகிறது. அப்போது அவர் சாட்ஜிபிடி துணையுடன் வாட்ஸ்அப் வழியே அந்தச் சேவையை பெற்றுள்ளார். உண்மையில் இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இந்தியாவில் நடைபெற்று வரும் மாற்றத்தை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இதனை வெறுமனே ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் பயன்பாட்டை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. மற்ற தொழில்நுட்ப பயன்பாடுகளையும் வைத்துச் சொல்கிறேன்.
பிரதமர் மோடி உடனான சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் உள்ள குறைபாடுகள் குறித்தும், அதில் ஏன் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் பேசினேன்” என சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
சாட்ஜிபிடி? தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட் தான் சாட்ஜிபிடி. இதனை ஓப்பன் ஏஐ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர். இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.
இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலானவர்களின் பார்வையை பெற்றுள்ளது சாட்ஜிபிடி. கதையைச் சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும். இருந்தாலும் இதில் கிடைக்கும் சில தகவல்கள் பொதுவாக இருப்பதாகவும், சில தகவல்களில் தெளிவு இல்லை என்றும், சிலவற்றில் பிழை இருப்பதாகவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.