சென்னை: ஆவடி பெருநகர காவலில் இந்த ஆண்டில் மட்டும் 45 பாதசாரிகள் சாலை விபத்துகளில் மரணம் அடைந்துள்ளதாக ஆவடி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆவடி பெருநகரக் காவல் ஆணையரக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,”ஆவடி பெருநகர காவலில் இந்த ஆண்டில் மட்டும் 45 பாதசாரிகள் இறந்தது வேதனைக்குரியது. இதில் மின்விளக்கு கம்பங்களை கடக்கும் போதும் அலட்சியம், சென்டர் மீடியன் மீது குதித்தல் மற்றும் பக்கத் தடைகளை மீறி செல்வதாலும் சாலைகளில் தங்கள் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்கின்றனர்.
குடிபோதையில் பாதசாரிகள் நிலை தடுமாறி சாலையில் தன் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். பிச்சை எடுப்பவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் அலட்சியமாக சாலையைக் கடந்து செல்வதாலும் உயிரிழப்பு நேர்ந்துந்துள்ளது.
இவ்வுயிரிழப்பை நம்மால் தடுக்க முடியுமா? ஆம்! பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க வரி கோடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குடிபோதையில் சாலையை கடப்பதை தவிர்க்க வேண்டும். முதியவர்கள் சாலையை கடக்க ஏதுவாக அங்கிருக்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்ய வேண்டும்.
மக்கள் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் அவர்களது வேகத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.பாதசாரிகளின் உயிரிழப்பை ஒழிப்போம்! பாதசாரிகளை பாதுகாப்போம்!” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாதசாரிகளின் பாதுகாப்பான நடமாட்டத்தின் கவனத்திற்கு,
ஆவடி பெருநகர காவலில் இந்த ஆண்டில் மட்டும் 45 பாதசாரிகள் இறந்தது வேதனைக்குரியது.— Avadi Police Commissionerate (@avadipolice) June 10, 2023