மும்பை: Sridevi (ஸ்ரீதேவி) பிரபல புகைப்பட கலைஞர் அவினாஷ் கௌரிகர் நடிகை ஸ்ரீதேவியுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
ஸ்ரீதேவி தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். சிவகாசி அருகே மீனம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த அவர் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு துணைவன் படத்தில் அவர் ஏற்றிருந்தது முருகன் வேடம். அதனைப் பார்த்த ரசிகர்கள் யார் இந்த குழந்தை என்று அப்போதே பேச ஆரம்பித்தனர். தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கத் தொடங்கினார்.
பாலசந்தர் படத்தில்: குழந்தை நட்சத்திரமாக பல மொழிகளில் நடித்து பல விருதுகளை வென்ற அவர் கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி கருதப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஸ்ரீதேவி லீட் ரோலிலும் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
சிறை எடுத்த மயில்: ஸ்ரீதேவியை தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே. அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த மயில் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட். டீச்சராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளம்பெண் ஒரு மருத்துவரால் ஏமாற்றப்பட்டு, பிறகு தான் கிண்டலடித்த சப்பாணியையே திருமணம் செய்துகொண்டு வாழ்வது என ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தை பார்த்த பலரும் மயிலுக்கு மனதை கொடுத்தனர்.
ரூல் செய்த ஸ்ரீதேவி: 16 வயதினிலே படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தென் இந்தியா முழுவதும் ஸ்ரீதேவியின் அலை அடித்தது. இதன் காரணமாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். குறிப்பாக தமிழ்நாடு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. ரஜினி, கமல் என அப்போது வளர்ந்து வந்த இரண்டு ஹீரோக்களுடனும் ஸ்ரீதேவி போட்டிப்போட்டுக்கொண்டு நடித்தார்.
ஹிந்தியில் மயில்: இதனையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கும் தனது அழகாலும், திறமையாலும் வெற்றிக்கொடியை நாட்டினார். அங்கும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து ஒட்டுமொத்த ஹிந்தி திரையுலகத்தையும் தனது கால்ஷீட்டுக்காக காத்திருக்க வைத்தார். அந்த சமயத்தில்தான் ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளராக விளங்கிய போனிகபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடைசி படம்: போனிகபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகிவிட்ட அவர் தமிழில் கடைசியாக புலி படத்தில் நடித்தார். அதன் பிறகு ஹிந்தியில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் ரீ என் ட்ரி கொடுத்த அவர் கடைசியாக மாம் படத்தில் நடித்தார். இந்தச் சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது ஹோட்டல் அறையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நினைவுகள் பகிர்ந்த் அவினாஷ்: இந்நிலையில் பிரபல புகைப்பட கலைஞரான அவினாஷ் கௌவரிகெர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ரீதேவியுடனான தனது நினைவுகள் குறித்து பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “எனது முதல் படம் ராஜா இந்துஸ்தானிதான். ஆனால் முதல்முறையாக சம்பளம் பெற்று ஸ்ரீதேவியை புகைப்படம் எடுத்த திரைப்படம் ஜுடாய். அந்தப் படத்துக்காக புகைப்படம் எடுக்க சென்றிருந்தேன். அப்போது ராமநாயுடு ஸ்டூடியோ வெளியே அவர் அமர்ந்திருந்தார்.
பாடம் எடுத்த ஸ்ரீதேவி: என்னை பார்த்த அவர் அனைத்தையும் ரெடி செய்துவிட்டு என்னை அழையுங்கள் என்றார். நானும் ரெடி செய்துவிட்டு அவரை அழைத்தேன். ஒரு கண்ணாடிக்கு முன் அமர்ந்தபடி போஸ் கொடுத்தார். அப்போது பின்பக்கம் இருக்கும் வெளிச்சம் எனது மூக்கில் அடிக்கிறதே பரவாயில்லையா என கேட்டார். உண்மையில் அது எனக்கு தெரியவில்லை. ஒன்று அந்த இடத்தில், அது எனக்கு தெரியாது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லை அது எனக்கு தெரியும் என்று சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் நான் அந்த இடத்தில் எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டேன். இருப்பினும் அதை நான் திருத்தவில்லை. அதை உணர்ந்துகொண்ட ஸ்ரீதேவி அந்த பின் பக்க வெளிச்சம் தெரியாதபடி போஸ் கொடுத்தார். நான் அந்த சமயத்தில் வளர்ந்துவரும் புகைப்பட கலைஞர். அதை அவர் வெளிக்காட்டாதபடி நடந்துகொண்ட விதம் எல்லாம் எனக்கு பெரிய பாடம். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார்” என்றார்.