மனிதனை மனிதனே சுமப்பதா? தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை எதிர்த்து வெடித்த போராட்டம்! போலீஸ் குவிப்பு

மயிலாடுதுறை: தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்வு இன்று நடைபெறும் நிலையில் அதற்கு எதிராக மாலை பெரியாரிய, இடதுசாரி அமைப்புகள் ஒன்றுகூட கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதீனத்திற்கு உட்பட்ட 1500 ஆண்டுகள் பழமையான ஞானபுரீஸ்வரசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த குருபூஜை விழா வைகாசி மாதத்தில் 11 நாட்கள் கொண்டாடப்படும்.

கடந்த 10 நாட்களுக்கு முன் இந்த திருவிழா தருமபுர ஆதீன மடத்தில் தொடங்கியது. இந்த நிலையில் 11ஆம் நாளான இன்று தருமபுர ஆதீனத்தை அமைத்த ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழாவும் பட்டினப் பிரவேசமும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம்.

பட்டினப் பிரவேசம் என்றால் பல்லக்கில் தருமபுர ஆதீனத்தை அமரவைத்து பக்தர்கள் அந்த பல்லக்கத்தை தூக்கிச் சென்று 4 மாட வீதிகளிலும் வலம் வருவார்கள். கடந்த ஆண்டு இந்த திருவிழா நடைபெறும்போது, மனிதனை மனிதனே தூக்கி வருவதற்கு எதிராக முற்போக்கு அமைப்புகள் குரல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்துக்கு அப்போது கோட்டாட்சியராக இருந்த பாலாஜி தடைவிதித்தார். இதனால் கொந்தளித்த இந்து அமைப்பினரும், பிற மட ஆதீனங்களும், பக்தர்களும் அரசியல் கட்சிகளும் தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

முதலமைச்சர் முக ஸ்டாலினை பல்வேறு ஆதீனங்கள் சந்தித்து பட்டினப் பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் பட்டினப் பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்குவதாக கோட்டாட்சியர் அறிவித்ததை அடுத்து அந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த ஜூன் 31 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியான திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் நாற்காலி பல்லக்கில் புறப்பட்டுன் குருமகா சன்னிதானங்களில் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.

இந்த நிலையில் 11 ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பட்டினப் பிரவேச நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள மதுரை ஆதீனம் உட்பட பல்வேறு ஆதீனங்கள் வருகை தந்து இருக்கிறார்கள். இதற்கிடையே இந்த பட்டினப் பிரவேசத்துக்கு எதிராக மீண்டும் முற்போக்கு அமைப்புகள் குரல் கொடுத்து இருக்கின்றன.

இது தொடர்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்த பல்வேறு அமைப்புகள் மயிலாடுதுறை டிஎஸ்பியை சந்தித்து அனுமதி கோரினர். ஆனால், போலீஸ் அனுமதியளிக்கவில்லை. இந்த நிலையில் மாலை தடையை மீறி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனிதனை மனிதனே சுமப்பதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.