பெங்களூரு: கர்நாடகாவில், தனக்கு திருமணம் நடந்ததே தெரியாது என கூறி, கணவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, பெண் ஒருவர் அளித்த புகாரின் கீழ் விசாரணை நடத்த போலீசாருக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
‘சட்டத்தை தவறாக பயன்படுத்தி, இதுபோன்ற புகார்கள் அளிக்கப்படுகின்றன’ என, உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
தகராறு
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்தில் பணிபுரிந்த ஆனந்த், புனிதா – பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன – ஆகியோர் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்தாண்டு ஜனவரி 27ல், இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்தனர்.
இந்த திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
இதன்பின், மல்லேஸ்வரம் பதிவாளர் அலுவலகத்துக்கு இருவரும் சென்று, முறைப்படி திருமணத்தை பதிவு செய்தனர்.
அன்று, புனிதாவுக்கு பிறந்த நாள் என்பதால், ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, புனிதாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதையும், இருவரும், ‘வாட்ஸாப்’ வாயிலாக தொடர்ந்து தகவல்களை பரிமாறி வருவதையும் அறிந்த ஆனந்த், இது குறித்து புனிதாவிடம் கேள்வி எழுப்பினார்.
இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதைஅடுத்து, திருமணம் நடந்த மூன்றே நாட்களில், ஜன., 29ம் தேதி புனிதா, தன் கணவர் வீட்டை விட்டு வெளியேறி, தன் வீட்டுக்குச் சென்றார். இதற்கு பின், இருவருக்கும் இடையே எந்த பேச்சும் நடக்கவில்லை.
போலீசில் புகார்
இதைத் தொடர்ந்து, 32 நாட்கள் கழித்து, புனிதா போலீசில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
எனக்கும், ஆனந்துக்கும் திருமணம் நடந்ததே தெரியாது. திருமணத்தன்று மயக்க நிலையில் இருந்தேன். அன்று என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை.
ஆனந்த் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை துவக்கினர். இதை எதிர்த்து ஆனந்த் சார்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி நாகபிரசன்னா முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி உத்தரவிட்டதாவது:
இந்த வழக்கை பார்த்த மாத்திரத்தில், சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது.
திருமணம் நடந்ததே தெரியாது என புனிதா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, அவர் மகிழ்ச்சியுடன் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
விசாரணைக்கு தடை
அவர் சம்மதத்துடனேயே திருமணம் நடந்திருப்பதும் தெளிவாகிறது. அவர் விருப்பப்பட்டே, பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்திடுவது, ‘வீடியோ’ வாயிலாக தெரிகிறது.
எனவே, கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் புனிதா கூறுவதை ஏற்க முடியாது.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை, ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்