அக்னி நட்சத்திரம் முடிந்தும் அனல் விட்டபாடாக இல்லை. மூன்று வேளைகளுக்கும் கூலாக சாப்பிடுவதையே வயிறும் மனமும் விரும்புகிறது. அந்த வகையில் இந்த வார வீக் எண்டை கூலாக ஜூஸ், சாலட் என கொண்டாடத் தயாரா?
வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்
தேவையானவை:
* வாட்டர்மெலன் (தர்பூசணி) – ஒரு கப் (விதை நீக்கி நறுக்கியது)
* சப்ஜா விதைகள் – ஒரு டீஸ்பூன்
* சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை:
சப்ஜா விதைகள் முழுகும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். 10 நிமிடங்களில் உப்பி இருக்கும். மிக்ஸியில் தர்பூசணியை ஜூஸ் செய்து அதில் சப்ஜா விதைகளை ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்துக் கலந்து, சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
கேரட் சப்ஜா ஜூஸ்
தேவையானவை:
* கேரட் – 2
* சப்ஜா விதைகள் – 2 டீஸ்பூன்
* தேன் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது) நாட்டுச் சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்
* ஏலக்காய் – ஒன்று
* இஞ்சி – கால் இன்ச் துண்டு (தோல் சீவவும்)
* மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை:
கேரட்டை நறுக்கிக்கொள்ளவும். சப்ஜா விதைகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். 10 நிமிடங்களில் உப்பி இருக்கும். பிறகு, மிக்ஸியில் கேரட், தேன், ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர்விட்டு மையாக அரைத்து அதனுடன் ஊறிய சப்ஜா விதைகளைச் சேர்த்துக் கலக்கவும். பின்பு அதில் மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.
சப்ஜா விதைகள் குளிர்ச்சித்தன்மை கொண்டவை. கோடைக்காலத்தில் வயிறு சூடாகாமல் சீராக இருக்க உதவும்.
முளைகட்டிய கொள்ளு காய்கறி சாலட்
தேவையானவை:
* முளைகட்டிய கொள்ளு – 2 டேபிள்ஸ்பூன்
* கேரட் – பாதி (நறுக்கவும்)
* குடமிளகாய் – பாதி (நறுக்கவும்)
* நறுக்கிய லெட்யூஸ் – சிறிதளவு
* பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்)
* வினிகர் – ஒரு டீஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கொள்ளு, கேரட், குடமிளகாய், லெட்யூஸ், உப்பு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்க்கவும். இதனுடன் வினிகர் சேர்த்துக் கலக்கவும். தினமும் காலையில் சாப்பிட நல்ல சத்தான உணவு இது.
ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்
தேவையானவை:
* ஓட்ஸ் – ஒரு கப்
* தேன் – 4 டேபிள்ஸ்பூன்
* காய்ச்சிய பால் – அரை கப்
* கொய்யாப்பழம் (நறுக்கியது) – அரை கப்
செய்முறை:
ஓட்ஸை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு பால் சேர்த்துக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். பின்பு ஆறவிட்டு அதில் தேன், மற்றும் கொய்யாப்பழத் துண்டுகள் சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.