புதுடில்லி: ”இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் புகார்களை திரும்பப் பெற நெருக்கடி கொடுக்கப்படுகிறது,” என, மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் கூறிஉள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக, ஒரு சிறுமி உட்பட ஏழு மல்யுத்த வீராங்கனையர் பாலியல் புகார் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, அவர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் நேற்று கூறியதாவது:
பாலியல் புகார் கொடுத்த சிறுமிக்கு கடும் நெருக்கடி கொடுத்து, புகாரை திரும்பப் பெற வைத்துள்ளனர்.
இதுபோலவே, புகார் கூறியுள்ள மற்றவர்களுக்கும் சமரசம் செய்யும்படி கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எம்.பி.,யாகவும் உள்ள அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, புகார் கூறியவர்களையும், போராடி வரும் எங்களையும் மிரட்டி வருகிறார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குருடன் நடத்திய பேச்சின்படி, ௧௫ம் தேதி வரை காத்திருப்போம்.
அதன்பின், அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றும் ஜக்பீர் சிங் நேற்று அளித்த பேட்டியில், பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று குறிப்பிட்டார். இதையடுத்து, அவருடைய வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்