ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் தொடராக வெளிவரும் `பாட்டுத்தலைவன்’ நிகழ்ச்சியில் வெளியான பாடலாசிரியர் ஏகாதசியின் நேர்காணல். இந்த நேர்காணலில் தனது திரையுலக பயணம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.
திரை வாய்ப்பு என்பது பின்புலம் இல்லாதவர்களுக்குக் கிடைப்பது சாதாரணம் அல்ல. அந்த காலக்கட்டம் உங்களுக்கு எப்படி இருந்தது?
எனக்கு பாட்டு எழுதுவது பிடிக்கும். எழுத்தாளர் சங்க மேடைகளில என் பாட்டு ஒலிச்சிகிட்டிருக்கு. நான் சினிமாவுக்குள்ள ஒரு டைரக்டர் ஆகணும் என்று தான் வந்தேன். ‘பாட்டு எழுதுறவன் படத்தை இயக்கமாட்டான்’ என்கிற ஒரு சின்ன அரசியல் இன்றும் உண்டு. அறிவுமதி அண்ணன் தொடங்கி நா. முத்துகுமார் வரைக்கும் துணை இயக்குநராக வந்து இயக்குநர் ஆக முடியாதவர்கள் நிறைய பேர் உண்டு. அதனால நான் இந்தத் துறைக்கு வந்ததும் எனக்கு பாட்டு எழுத வரும்ங்கிறதையே மறைச்சு துணை இயக்குநரா ஜி. ஜெரால்ட் அவர்களிடம் சேர்ந்தேன். அதன்பிறகு, பாரதிராஜா, பிரபு சாலமன் ஆகியவர்களுடனும் துணை இயக்குநராக பணிபுரிந்தேன். அதன் பிறகு 2011-ஆம் ஆண்டு நான் இயக்கிய ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ திரைபடம் வெளிவந்தது. 2004 ல விருமாண்டி படம் ஷூட்டிங்கின்போது என் நண்பர் கருணாநிதி நான் எழுதிய ஆல்பம் பாடல்களை நடிகர் பசுபதிக்கு பாடிகாட்ட அது பிடித்து போய், தான் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தில் இந்த பாடல் இடம்பெற வேண்டும் என்று கேட்டுகொண்டார். அப்படி தான் இயக்குநர் அசோக் குமார் இந்த பாட்டின் பாடலாசிரியரை தேட என்னை கண்டுபிடித்துவிட்டனர். பசுபதி அண்ணன் மூலமா இந்த பாட்டு அந்த படத்தில வந்திச்சு.. ஆனா கடைசியில பசுபதிக்கு பதிலா தென்னவன் தான் நடிச்சாரு. அதன் பிறகு தான் ஜி. வி பிரகாஷ் உடன் ‘வெயில்’, விஜய் ஆண்டனியின் ‘அவள் பெயர் தமிழரசி ‘ல 5 பாடல்கள் . அதன் பிறகு தான் பெரிய ஹிட்டான ‘ஆடுகளம்’ படத்துலயும் எழுதினேன்.
ஒரு படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் எழுதுவதிலும், முழு பாடல்களையும் எழுதுவதிலும் வித்தியாசம் உண்டு. முழு கதையும் தெரியும். எந்த சூழலில் எந்த இடத்தில் பாட்டு வரப்போகிறதென்று வேலை செய்ய முடியும். இதுபற்றி ஒரு பாடலாசிரியராக உங்களின் கருத்து என்ன?
ஒரு படத்தில சிங்கிள் கார்டு வாங்கிறது பெரிய கெத்து. வெயில் படத்தில நா. முத்துக்குமார் எல்லா பாடல்களும் எழுதியிருப்பார். நான் ஒரு சின்ன பாடல் எழுதியிருப்பேன். ஆனாலும் என் பெயரும் அங்க அறியப்படுது. ஆனா ‘அவள் பெயர் தமிழரசி ‘ல இதுக்கு உல்டாவா அமைஞ்சிருக்கும். மதயானைக்கூட்டம் படத்தில் முழு பாடல்களையும் எழுதினேன். இப்போ ‘ராவண கோட்டம்’ படத்தில 5 பாடல்கள் எழுதியிருக்கேன்.
நமக்கு கவிதை எழுத வருகிறது எனும் போது, முதலில் நம் நெருங்கிய சுற்றத்தில் உள்ளவர்களுக்கு தான் காட்டுவோம். அதுவும் காதல் கவிதைகள் தான் அந்த பருவத்தில் தோன்றும் நிறைய பேருக்கு.. இது பற்றி?
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்பவே சங்கு என்ற நாராயணன் எழுதிய 80 பக்க தொகுப்பு ஒரு காதல் கவிதை புத்தகம் தான் முதல்ல படிச்சேன். அந்த புத்தகத்தை யார் தந்தாங்கன்னு தெரியல. அந்த கவிஞனை இப்போ நான் தேடறேன். அவை எல்லாம் அற்புதமான கவிதைகள்.
பாடலாசிரியர் ஏகாதசியின் முழு நேர்காணலைக் காண க்ளிக் செய்யவும்