சென்னை:
“ஒரு தமிழரையாவது பிரதமர் பதவியில் உட்கார வைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் லட்சியம். நிச்சயம் அந்த நாள் விரைவில் வரும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அமித் ஷா சென்னை வரப் போகும் செய்தியானது, ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. அவர் தமிழகத்துக்கு வந்து பேசப்போகும் விஷயங்கள், கட்சியினருடன் நடத்தப்போகும் ஆலோசனைகள் ஆகியவை பெரிய அரசியல் நகர்வுகளுக்கு வழிவகுக்கும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமித் ஷா நேற்று இரவு சென்னைக்கு வந்தார். அவர் வந்த சமயத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமித் ஷாவை அவமானப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்பட்டதாக கூறி பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். ஆனால், இது மின்வெட்டு இல்லை என்றும், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டிருக்கலாம் மின்வாரியம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இன்று காலை கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளை அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலுக்காக தென் சென்னையில் பூத் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிவடைந்து விடும். எதிர்காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் லட்சியம். இருமுறை பிரதமர் வேட்பாளரை தமிழகம் இழந்ததற்கு திமுகதான் காரணம். எனவே தமிழரை பிரதமர் பதவியில் அமர்த்த உறுதியேற்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.