அகமதாபாத்: அரபிக் கடலில் ஆக்ரோஷம் காட்டி சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள பிபோர்ஜாய் உக்கிரத்தைத் தணிக்க குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் தமது அடிப்பொடிகளுடன் பூஜை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் அல்லது பைபர்ஜாய் புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறியது. தற்போது சூப்பர் புயலாக பைபர்ஜோய் உருவெடுத்துள்ளது. இப்புயல் ஜூன் 15-ந் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் அரபிக் கடல் பகுதியில் கரையைக் கடக்க உள்ளது. பைபர்ஜோய் கரையை கடக்கும் போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பிபோர்ஜாய் என்ற பெயரை தந்தது வங்கதேசம். இதற்கு அர்த்தம் பேராபத்து என பெயர்.
பிபோர்ஜாய் புயலால் நாட்டின் அரபிக் கடல் மாநிலங்களில் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமானது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
வானிலையில் ஏற்படும் மாற்றங்களால் புயல் மழை உருவாவது என்பது இயற்கை. இதனை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனாலும் மூடநம்பிக்கை கொண்ட சிலர் இதற்கு எல்லாம் பரிகாரபூஜை நடத்துவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அப்படி ஒருவர்தான் குஜராத் எம்.எல்.ஏ. ப்ரத்யுமான்சிங் ஜடேஜா. அப்படி என்ன செய்துவிட்டார் என கேட்கிறீர்களா? அரபிக் கடலின் கரையோரத்தில் அமர்ந்து கொண்டு புயலே! புயலே! உக்கிரத்தை குறை! சேதத்தை குறைத்துவிடு! எங்களை காப்பாற்று! என குஜராத் மொழியில் சமஸ்கிருத ஸ்லோகங்களை உச்சரித்தபடியே பூஜை புனஸ்காரங்கள் செய்தார். இதற்கு அவரது அடிப்பொடிகளுடன் பயபக்தியுடன் உடந்தையாக நின்றனர். இப்படி பூஜை செய்த ப்ரத்யுமான்சிங் ஜடேஜா, குஜராத் மாநிலம் கட்ச் பிராந்தியத்தின் அப்டசா தொகுதி பாஜக எம்.எல்.ஏ.