சண்டிகர்,
அரியானா மாநிலம் ஹிசர் மாவட்டம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மனைவி சுமன். இதனிடையே கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு மற்றும் சண்டை நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், சண்டை காரணமாக சுமன் அண்டை கிராமத்தில் வசித்து வரும் தனது சகோதரர்களான மன்ஜித், முகேஷை சமாதானம் பேச அழைத்துள்ளார்.
இதனையடுத்து, சகோதரர்கள் இருவரும் இன்று சுமன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ராகேஷுக்கும் அவரது மனைவி சுமனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதை தடுக்க சகோதரர்கள் முயற்சித்துள்ளனர்.
அப்போது மோதல் ஏற்படவே ராகேஷ் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் மனைவி சுமன், மைத்துனர்கள் மன்ஜித், முகேஷை சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ராகேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய ராகேஷையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.